உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஊத்துக்கோட்டையில் குடிநீர் வீண் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனம்

ஊத்துக்கோட்டையில் குடிநீர் வீண் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனம்

ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் தெரு குழாய்கள் மற்றும் பூமிக்கடியில் புதைக்கப்பட்ட குழாய்கள் சேதமடைந்ததால் குடிநீர் வீணாகி வருகிறது. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 வார்டுகளில், 3,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 500க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. ஆரணி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மூலம், ஊத்துக்கோட்டை பேருந்து நிலையம் பின்புறம், செட்டித்தெரு, சிட்ரபாக்கம் உள்ளிட்ட இடங்களில், ஐந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. இங்கிருந்து, குழாய்கள் மூலம் குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இங்குள்ள தெரு குழாய்களை பேரூராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், குழாய் சேதமடைந்து தண்ணீர் வீணாகிறது. அண்ணாநகர் மின்வாரிய அலுவலகம் எதிரே, சாலையோரம் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் வீணாகும் குடிநீரை கட்டுப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி