திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் 18 கீ.மீ., சாலை விரிவாக்கம் எப்போது?
திருவள்ளூர்:சிங்கபெருமாள் - ஸ்ரீபெரும்புதுார் - திருவள்ளூர் - செங்குன்றம் நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதுார் முதல் போளிவாக்கம் வரை உள்ள 18 கி.மீ., துாரமுள்ள நெடுஞ்சாலை குறுகலாக உள்ளதால் பத்துக்கும் மேற்பட்ட கிராம வாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். குறுகலான இந்த இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக சீரமைப்பு எப்போது என்ற கேள்வி பகுதிவாசிகள் மற்றும் வாகன ஒட்டிகளிடையே எழுந்துள்ளது.சிங்கபெருமாள்கோவில் - ஸ்ரீபெரும்புதுார் - திருவள்ளூர் - செங்குன்றம் நெடுஞ்சாலை 57ல் வழியாக தினமும் அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி, கனரக வாகனம் என தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த நெடுஞ்சாலையில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட போளிவாக்கம், போளிவாக்கம் சத்திரம், தொடுகாடு போன்ற கிராமங்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இந்த நெடுஞ்சாலை மிகவும் குறுகலாக இருவழிச்சாலையாக உள்ளதால் வாகன ஒட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதோடு விபத்தில் சிக்குவதாலும் 20க்கும் மேற்பட்ட கிராம பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.இதையடுத்து திருவள்ளூர் உட்கோட்டம் மேற்கு பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நெடுஞ்சாலை 57 ல் மணவாளநகர் - அத்திகுளம் வரை 4.1 கி.மீ., துாரமுள்ள சாலை, 49 கோடி ரூபாய் மதிப்பில் இரு வழிச்சாலை 12 சிறுபாலங்கள் விரிவுப்படுத்தப்பட்டு நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி கடந்த ஓராண்டுக்கு முன் நிறைவடைந்தது.இந்த நெடுஞ்சாலையில் அத்திகுளம் முதல் ஸ்ரீபெரும்புதுார் வரை 18 கி.மீ., துாரமுள்ள நெடுஞ்சாலை எவ்வித விரிவாக்கப் பணிகள் நடைபெறவில்லை.இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் இந்த நெடுஞ்சாலை பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.மேலும் அத்திகுளம் முதல் ஸ்ரீபெரும்புதுார் செல்லும் இந்த நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறாததால் மப்பேடு ஊராட்சியில் 1,200 கோடி ரூபாய் அமையவுள்ள பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவிற்கு வாகனங்கள் வந்து செல்வதில் சிக்கல் ஏற்படும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை முழுமைப்படுத்த வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நான்கு வழிச்சாலை பணிகள் நிறைவடைந்த அத்திகுளம் பகுதியில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் செல்லும் நெடுஞ்சாலை சென்னை வெளிவட்டச்சாலை திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.தற்போது சிங்கபெருமாள் கோவில் முதல் காட்டுப்பள்ளி துறைமுகம் வரை வெளிவட்டச்சாலை திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் அத்திகுளம் -- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் வெளிவட்டச்சாலை திட்டத்தின் கீழ் துவங்கி நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.