மாத கணக்கில் நிற்கும் ரயில் அப்புறப்படுத்துவது எப்போது?
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை ரயில் நிலையத்தின் இரண்டாவது நடைமேடையில், மாத கணக்கில் நிறுத்தப்பட்டுள்ள விரைவு ரயிலை பாதுகாப்பு மற்றும் அவசர தேவை கருதி,அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என, ரயில் பயணியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் மூன்று நடைமேடைகள் உள்ளன. அவற்றில், இரண்டாவது நடைமேடையில், ஆறு மாதங்களாக, குவஹாத்தி - கொல்கட்டா விரைவு ரயில் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று லுாப் லைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது, கடந்தாண்டு அக்டோபர் 11ம் தேதி, சென்னையில் இருந்து பீஹார் நோக்கி சென்ற தர்பாங்கா விரைவு ரயில் மோதியது. இந்த விபத்தில், ரயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி சிதறியதுடன், ஏழு பெட்டிகள் தடம் புரண்டன. அதேபோன்று, தற்போது மாத கணக்கில் விரைவு ரயில் நிறுத்தப்பட்டிருப்பதால், மீண்டும் விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் ரயில் பயணியர் உள்ளனர். மேலும், அவசர தேவைக்கு, கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு மற்றும் அவசர தேவை கருதி, உடனடியாக அந்த ரயிலை அப்புறப்படுத்த வேண்டும் என, ரயில் பயணியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.