உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆரம்ப சுகாதார நிலையம் நாகபூண்டியில் அமையுமா?

ஆரம்ப சுகாதார நிலையம் நாகபூண்டியில் அமையுமா?

ஆர்.கே.பேட்டை:நாகபூண்டியில் செயல்பட்டு வந்த தாய் - சேய் நல விடுதி, சில ஆண்டுகளுக்கு முன் இடித்து அகற்றப்பட்ட நிலையில், அந்த இடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியம் பெரியநாகபூண்டியில் நாகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு எதிரே உள்ள பேருந்து நிறுத்தம் அருகே தாய் - சேய் நல விடுதி செயல்பட்டு வந்தது. கடந்த 1970ல் திறக்கப்பட்ட தாய் - சேய் நல விடுதியில், நாகபூண்டி மற்றும் அதையொட்டிய ஆந்திர மாநில கிராமங்களைச் சேர்ந்த கர்ப்பிணியர், கர்ப்ப கால பரிசோதனை மற்றும் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், தாய் - சேய் நல விடுதி பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்டது. அதை தொடர்ந்து, பாழடைந்த கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. இதன் காரணமாக, இந்த கிராமங்களைச் சேர்ந்த கர்ப்பிணியர், 10 கி.மீ.,யில் உள்ள பாலாபுரம் அல்லது அம்மையார்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால், இந்த பகுதியில் இருந்து பாலாபுரம் மற்றும் அம்மையார்குப்பத்திற்கு போதிய பேருந்து வசதி இல்லாத தால், பகுதிமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, கர்ப்பிணியரின் நலன் கருதி, பெரிய நாகபூண்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ