பணமின்றி சான்றிதழ் பெற முடியாத அவலம் லஞ்சத்தில் புரளும் வருவாய் துறை அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்படுவரா?
திருவாலங்காடு:மணவூர் குறுவட்டத்தில் பட்டா மாற்றம், வருவாய், ஜாதி, இருப்பிட சான்றிதழ் வழங்க பணம் கேட்பதால், மக்கள் வேத னை அடைந்துள்ளனர். இங்கு பணியாற்றும் வருவாய் ஊழியர்களை, வேறு குறுவட்டத்திற்கு மாற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர். திருத்தணி தாலுகாவிற் கு உட்பட்டு பூனிமாங்காடு, திருவாலங்காடு, திருத்தணி, மணவூர் உட்பட ஆறு குறுவட்டங்கள் உள்ளன. இதன் கீழ், 87 வருவா ய் கிராமங்கள் உள்ளன. தற்போது, மணவூரை தலைமையிடமாக கொண்ட குறுவட்டத்தில், 12 வருவாய் கிராமங்களை ஒரு வருவாய் ஆய்வாளர், 12 வி.ஏ.ஓ.,க்கள் நிர்வகித்து வருகின்றனர். இந்த மணவூர் குறுவட்ட வருவாய் கிராமங்களில், இரு ஆண்டுகளாக பணம் கொடுக்காமல், எந்த சான்றிதழ்களையும் பெற முடியாத நிலை உள்ளதாக, மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, பட்டா மாறுதல், நிலம் அளவீடு செய்தல், ஜாதி, வருவாய், இருப்பிடம், ஆதரவற்ற விதவை உள்ளிட்ட சான்றிதழ் பெறுவதற்கு, வருவாய் அதிகாரிகளிடம் பணம் கொடுத்தால் தான் பணி நடக்கிறது. ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தாலும், சம்பந்தப்பட்ட ஆர்.ஐ., -வி.ஏ.ஓ.,க்களை நேரில் அணுகி பணம் கொடுத்தால் மட்டுமே சான்றிதழ்கள் பெற முடியும் என்ற அவலநிலை உள்ளதாக கூறுகின்றனர். இதுகுறித்து மணவூர் குறுவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது: எனக்கு சொந்தமான நிலம் ராஜபத்மாபுரத்தில் உள்ளது. ஆறு ஆண்டுகளாக பட்டா மாறுதல் செய்ய மணவூர், திருத்தணி வருவாய் அலுவலகத்திற்கு சென்றேன். நான்கு மாதத்திற்கு முன், 20,000 ரூபாய் கொடுத்த பின்பே பட்டா மாறுதல் கிடைத்தது. மருதவல்லிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், ஜாதி சான்றிதழ் வேண்டி ஆன்லைனில் விண்ணப்பித்த நிலையில், ஆர்.ஐ., பரிந்துரை இன்றி நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஆர்.ஐ., அலுவலகம் சென்று கேட்டபோது, 200 ரூபாய் பெற்றுக் கொண்டு தாசில்தாருக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. வருவாய் துறை அதிகாரிகளுக்கு சேவை மனப்பான்மையே இல்லை. பணம் மட்டுமே குறிக்கோளாக உள்ளது. எனவே, இங்கு பணிபுரியும் ஊழியர்களை, வேறு குறுவட்டத்திற்கு மாற்ற கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.