கும்மிடியில் பேருந்து வசதியின்றி பெண் தொழிலாளர்கள் அவதி
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து சிப்காட் வளாகத்திற்கு பேருந்து வசதி இல்லாததால், பெண் தொழிலாளர்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 220 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அங்குள்ள தொழிற்சாலைகளில் ஒப்பந்த அடிப்படையில், 4,000க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் சிலர் அருகே உள்ள கிராமங்களில் வசித்து வரும் நிலையில், பெரும்பாலான பெண் தொழிலாளர்கள் கும்மிடிப்பூண்டியில் இருந்து தொலைவில் உள்ள கிராம பகுதிகளில் இருந்து வந்து செல்கின்றனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்திற்கு பேருந்து வசதி இல்லை. இதனால், அவர்கள் ஷேர் ஆட்டோ, லாரி உள்ளிட்ட வாகனங்களில் வேலைக்கு வந்து செல்கின்றனர். பெண் தொழிலாளர்களின் பிரதான போக்குவரத்து வாகனமாக இருப்பது ஷேர் ஆட்டோக்கள் தான். ஷேர் ஆட்டோவில் குறைந்தது, 20 பெண்கள் வரை ஆபத்தான முறையில் பயணித்து வருகின்றனர். பெண்களுக்கான இலவச பேருந்து வசதியை வழங்கிய தமிழக அரசு, கும்மிடிப்பூண்டி பகுதியில் பெண் தொழிலாளர்களுக்கு பேருந்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.