மின்கம்பத்தில் விளம்பர பலகை பழுது நீக்க ஊழியர்கள் அவதி
திருவாலங்காடு:திருவாலங்காடு பகுதிகளில் மின்கம்பத்தில் கட்டப்படும் விளம்பர பலகையால், பழுது நீக்குவதில் சிரமம் உள்ளதாக, மின்வாரிய ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். திருவாலங்காடு மின் பகிர்மான அலுவலகத்திற்கு உட்பட்டு, 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, 40,000க்கும் மேற்பட்ட மின் நுகர்வோர் உள்ளனர். தற்போது, திருவள்ளூர் ----- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. திருவாலங்காடு மையப்பகுதியாக உள்ளதால், நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள மின்கம்பங்களில் விளம்பர பலகை கட்டப்படுவது அதிகரித்துள்ளது. இதனால், பழுது நீக்குவதற்காக மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தில் ஏறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, மின்கம்பங்களில் அதிகரித்து வரும் விதிமீறல்களை கட்டுப்படுத்த வேண்டும். பருவமழை காலங்களில் முன்னெச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.