திருவாரூர்:'' மகிழ்ச்சி திட்டத்தில், யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை,'' என, டிஜிபி சங்கர் ஜிவால் பேசினார்.திருவாரூர், மத்திய பல்கலைக்கழகத்தில் நேற்று, போலீசாருக்கான, மகிழ்ச்சி திட்ட துவக்க விழா நடந்தது. திட்டத்தை, டி.ஜி.பி., சங்கர் ஜிவால், துவக்கி பேசியதாவது: சென்னையில், மகிழ்ச்சி திட்டம் துவங்கியபோது, 1000 பேர் கணக்கீடு செய்து, 600 பேருக்கு சிகிச்சை அளிக்க முடிந்தது. இதில்,100 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். இந்த திட்டத்திற்கு, யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. மனநல ஆலோசனைக்கு, அவர்களாகவே முன்வருவதற்கு அறிவுரை கூறுவோம்.தமிழகத்தில், போலீசாரின் மரணம் 2020ம் ஆண்டில்,337 பேர்; 2021ல், 414 பேர்; 2022ல், 283 பேர்; 2023 ஆண்டில்,313 பேரும் மரணம் அடைந்துள்ளனர். நடப்பு,2024ல், ஜனவரி முதல் ஜூலை 31 வரை, 165 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில், உடல் பாதிப்பு,விபத்து மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட, பலவற்றில், மரணம் ஏற்பட்டிருந்தாலும், 28 பேர் தற்கொலை செய்துள்ளனர்.இது,முற்றிலுமாக தடுக்கப்படவேண்டும். இதற்காகத் தான், இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மனநலம் பாதிக்கும்போது, உடல் நலமும் பாதிக்கப்படும் என்பதால், போலீசாரின் உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில், மனநல ஆலோசனைகள், மனநல மருத்துவர்கள் மூலம் வழங்கப்படுகிறது. சென்னை, மதுரையில் நடந்த மகிழ்ச்சி திட்டத்தின் மூலம், நினைத்ததை விட, அதிக அளவில் பலன் கிடைத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம், ஏராளமான காவல் துறையினர் பலன் அடைந்துள்ளனர்.இதுபோன்ற திட்டங்களால், மன அழுத்தத்தில் உள்ள, காவல்துறையினருக்கு, நிரந்தர தீர்வு பெற, முயற்சி எடுத்து வருகிறோம். இந்த திட்டத்திற்காக, 30.50 லட்சம் ரூபாய் ஒதுக்கிய,தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இந்த திட்டம், ஒரு ஆண்டிற்கு நடைபெறும்.இதில், மத்திய மண்டலத்தில் உள்ள, அனைத்து மாவட்ட காவல்துறையினர் மற்றும் திருச்சி மாநகர காவல் துறையினர் பங்கேற்று பயன்பெற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினாார்.