உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / பஸ் - வேன் மோதியதில் 4 பேர் இறப்பு

பஸ் - வேன் மோதியதில் 4 பேர் இறப்பு

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே நேற்று காலை, அரசு பஸ்சும் கேரளா ஆம்னி வேனும் மோதிக்கொண்டதில், நான்கு பேர் பரிதாபமாக இறந்தனர்; மூவர் படுகாயம் அடைந்தனர்.திருவாரூர் மாவட்டம், கருவேப்பஞ்சேரி கிராமத்தில், நாகப்பட்டினத்தில் இருந்து, சாயல்குடி நோக்கி சென்ற அரசு பஸ்சும், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து, வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த ஆம்னி வேனும், நேற்று காலை 7:00 மணிக்கு மோதிக்கொண்டன.இதில், வேன் டிரைவர், சாஜிநாத், 25, வேனில் பயணம் செய்த ராஜேஷ், 30, ராகுல், 29, சுஜித், 25, ஆகியோர் அதே இடத்தில் இறந்தனர். சாபு, 25, சுனில், 35, ரஜினிஷ், 40, ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மூவரும், மேல் சிகிச்சைக்காக, திருவாரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.சம்பவ இடத்தை, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் ஆய்வு செய்தார். திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குபதிந்து, அரசு பஸ் டிரைவர் சரவணன், 49, என்பவரை கைது செய்தனர்.

விபத்து நடந்தது எப்படி?

நாகப்பட்டினத்தில் இருந்து, துாத்துக்குடி வரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், ஆங்காங்கே குண்டும், குழியும் உள்ளன. விபத்து நடந்த இடத்தில் உள்ள பெட்ரோல் பங்க் சார்பில் தடுப்பு வைத்துள்ளனர். அதனால், அந்த இடத்தில், இருபுறமும் வரும் வாகனங்கள் மெதுவாகவே செல்லும்.வெளி மாநிலத்தில் இருந்து வந்த ஆம்னி வேன் என்பதால், தடுப்பு உள்ள இடத்தில், டிரைவர் வேகத்துடன் வந்து வேனை திருப்பியுள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த அரசு பஸ் மீது மோதியதாக கூறப்படுகிறது.ஆம்னி வேன் டிரைவர் துாக்க கலக்கத்தில் இருந்ததே விபத்துக்கு காரணம் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்னி வேனில் வந்தவர்கள், நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு திருவனந்தபுரத்தில் புறப்பட்டனர். வேனை எங்கும் நிறுத்தாமல் ஓட்டி வந்ததால், விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ