| ADDED : ஆக 07, 2011 01:36 AM
திருவாரூர்: ''காலையில் யார் முகத்தில் முழிக்கப்போகிறோம் என்ற சந்தேகத்தில் படுத்து உறங்கச் சென்றால், நாட்டில் அமைதி நிலவுமா?'' என கருணாநிதி பேசினார்.திருவாரூரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது: தமிழகத்தில் வேடிக்கையான வழக்கு சிலவற்றை சொல்ல விரும்புகிறேன். திருவாரூர் மாவட்ட செயலாளர் மீது பொய் வழக்கு தொடரப்பட்ட அதே நாளில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த, தென்சென்னை மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ., அன்பழகன் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்தனர். அவர் மீது, எட்டு பிரிவின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். புகார் கொடுத்தவர் லட்சணம் பற்றி கூறுகிறேன் கேளுங்கள். 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் நலிவடைந்த மில்களை வாங்கி, அவற்றை போலி ஆவணங்கள் மூலம், 250 கோடி ரூபாய்க்கு விற்று மோசடியில் ஈடுபட்டு, அதன் மூலம் கைதாகி, ஜாமீனில் வெளிவந்து, 20க்கும் மேற்பட்ட போலி, 'ரெக்கார்டு'களை தயாரித்தவர்; அவரும், அவரது நண்பரும் சேர்ந்து செய்த தவறு. உண்மை என்ன என்பது கூட தெரியாமல், எம்.எல்.ஏ.,வை காவல் துறை அதிகாரிகள் கைது செய்கிறார்கள் என்றால் அது பழிவாங்கும் செயலா, இல்லையா. அதேபோல், சேலம் வீரபாண்டி ஆறுமுகம், யாரோ ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், அவர் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகும்படி செய்தனர். அவரை கைது செய்தனர். ஜாமீனில் வெளியே வந்தார். மீண்டும் அவரை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். இது என்ன நாடா? இல்லை கடும்புலி வாழும் காடா? நாட்டிலே வாழ்கிறோமா? காட்டிலே வாழ்கிறோமா? காலையில் யார் முகத்தில் முழிக்கப்போகிறோம். இன்ஸ்பெக்டர் முகத்திலா? ஐ.ஜி., முகத்திலா? டி.ஐ.ஜி., முகத்திலா? என்ற சந்தேகத்தில் படுத்துறங்க செல்வார்களேயானால்...நாட்டில் அமைதி இருக்குமா? வளம் சிறக்குமா? நாட்டில் மக்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்று எண்ண முடியுமா? தமிழகத்தில் சுதந்திரத்தை பறிக்கும் ஆட்சி நடக்கிறது. இவ்வாறு பேசினார்.