டிஜிட்டல் அரெஸ்ட் என கூறி ரூ.13 லட்சம் நுாதன மோசடி
திருவாரூர்:ஓய்வுபெற்ற அஞ்சல் துறை அதிகாரியிடம், 13 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்களை போலீசார் தேடுகின்றனர். திருவாரூரை சேர்ந்தவர், குஞ்சிதபாதம், 80; ஓய்வுபெற்ற அஞ்சல்துறை அதிகாரி. இவரது இரு மகன்கள் வெளிநாட்டில் பணிபுரிகின்றனர். இவரது வங்கி கணக்கிற்கு மகன்கள் பணம் அனுப்பினர். இதை அறிந்த மர்ம நபர்கள், குஞ்சிதபாதத்திடம், 'உங்கள் வங்கி கணக்கில், சட்ட விரோதமாக பண பரிமாற்றம் நடந்துள்ளது. உங்களை, 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்கிறோம்' என, 'வாட்ஸாப்' அழைப்பில் பேசியுள்ளனர். மேலும், 'வழக்கில் இருந்து விடுபட, எங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்; இல்லையெனில், சி.பி.ஐ.,க்கு தகவல் தெரிவித்து விடுவோம்' என, மிரட்டியுள்ளனர். பயந்த குஞ்சிதபாதம், அவர்களது வங்கி கணக்கிற்கு, ஆக., 19 முதல், பல தவணைகளாக, 13 லட்சம் ரூபாயை அனுப்பினார். பின், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில், நேற்று முன்தினம், புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.