கனிம வள ஆபீசில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு
துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக மூன்றாவது தளத்தில் செயல்படும் கனிம வளத்துறை அலுவலகத்தில், மாவட்ட மினரல் பவுண்டேஷன் டிரஸ்ட் என்ற ஒரு பிரிவு உள்ளது. அப்பிரிவில் கணக்கு அதிகாரியாக ஒப்பந்த ஊழியர், மறவன்மடம் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி, 43, பணியாற்றி வந்த நிலையில், திடீரென மாயமானார். கடந்த 15 ஆண்டுகளாக அப்பணியில் இருந்த அவர், ஜூலை 27க்கு பின் பணிக்கு வரவில்லை என, கலெக்டருக்கு கனிம வளத்துறை உதவி இயக்குனர் பிரியா கடிதம் அனுப்பினார். அவரது மாயம் குறித்து கனிம வளத்துறை அதிகாரிகள் விசாரித்தபோது, குவாரி உரிமையாளர்களின் பணம், 60 லட்சம் ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பது தெரிந்தது.தலைமறைவான அவர், ஒப்பந்த ஊழியர் என்பதால் கனிம வளத்துறை உயர் அதிகாரிகளும் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இதுவரை காவல் நிலையத்தில் யாரும் புகார் அளிக்காத நிலை உள்ளது. அவரது முறைகேடு தொடர்பாக, துாத்துக்குடி லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., ஜான்பால் தலைமையிலான போலீசார் சமீபத்தில் விசாரணை நடத்தினர்.தமிழ்செல்விக்கான பணி விபரம், அவரிடம் பணம் செலுத்தியவர்கள் விபரம் போன்றவற்றை சேகரித்த அவர்கள், கனிம வளத்துறை அதிகாரிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.