உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / செம்மண் திருடி விற்பனை; தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு

செம்மண் திருடி விற்பனை; தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குளங்களில், வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், விவசாயிகள் போர்வையில் சிலர் குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்று, செம்மண், சரளை மண் எடுத்து வணிக ரீதியாக விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.இதில், துாத்துக்குடி அருகே குலையன்கரிசல் பகுதியில் உள்ள பொட்டைக்குளத்தில் சிலர் விவசாயிகள் பெயரில் வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்று, செம்மண் கடத்திச் செல்வதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்க, வருவாய் கோட்டாட்சியர் பிரபு தலைமையில், மண்டல துணை தாசில்தார் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் குழுவினர் நேற்று முன்தினம் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அத்திமரப்பட்டி பகுதியில் அவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, சிறுபாடு கிராமத்தில் இருந்து முத்தையாபுரம் செல்லும் சாலையில் வந்த மூன்று லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்று, சட்ட விரோதமாக 9 யூனிட் செம்மண் எடுத்துச் செல்வது தெரியவந்தது.மூன்று லாரிகளையும், டிரைவர்களையும் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். தி.மு.க., விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சுரேஷ்குமார், 56, செம்மண் விற்பனையாளரான தி.மு.க., நிர்வாகி பாலமுருகன், 43, லாரி டிரைவர்கள் சுடலைமணி, 31, அடைக்கலம், 49, பார்த்திபன், 42, லாரி உரிமையாளர்கள் முருகன், 41, ஜெயராமன், 35, ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.போலீசார் கூறியதாவது:குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்த தி.மு.க., மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சுரேஷ்குமார் பெயரில், பொட்டைகுளத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. அனுமதி சீட்டை பயன்படுத்தி, மூன்று லாரிகளில் செம்மண் எடுத்து வணிக ரீதியாக விற்பனை செய்துள்ளனர். ஏழு பேர் மீது வழக்கு பதிந்து, பாலமுருகன், சுடலைமணி, அடைக்கலம், பார்த்திபன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ