உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / பைக்கில் தனியாக செல்வோரை குறி வைத்து கும்பல் வழிப்பறி

பைக்கில் தனியாக செல்வோரை குறி வைத்து கும்பல் வழிப்பறி

துாத்துக்குடி:துாத்துக்குடி துறைமுக சாலையில் தற்போது புதிதாக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், உப்பாற்று ஓடை முதல், சிப்காட் மேம்பாலம் வரை ரோட்டில் போதிய மின்விளக்கு வசதி இல்லாத நிலை இருந்து வருகிறது.அதை பயன்படுத்தி பைக்கில் தனியாக செல்வோரிடம் இருந்து மொபைல் போன், பணம், நகை பறிக்கும் செயலில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது.துாத்துக்குடி தெற்கு சங்கரப்பேரியைச் சேர்ந்த லாரி டிரைவர் அய்யனார், 53, புதிய துறைமுகம் மதுரை பைபாஸ் ரோட்டில் பைக்கில் தனியாக சென்றார்.அவரை பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த இருவர் திடீரென அய்யனாரிடம் இருந்து மொபைல் போனை பறிக்க முயன்றனர். அவர் தடுத்ததால், காலால் பைக்கை எட்டி உதைத்து தள்ளி விட்டனர். கீழே விழுந்த அய்யனாருக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அந்த வழியாக காரில் வந்தவர்கள் அய்யனாரை மீட்டு துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிப்காட் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் விசாரிக்கிறார்.அய்யனாரிடம் மொபைல் போனை பறிக்க முயன்றதையும், அவர் தடுத்து, கொடுக்க மறுத்ததால், காலால் அவர்கள் எட்டி உதைத்து கீழே தள்ளுவதையும், பின்னால் காரில் வந்தவர்கள் மொபைல் போனில் படம் பிடித்துள்ளனர். அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.இது குறித்து, சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:துாத்துக்குடி -- திருச்செந்துார் சாலை, துறைமுகம் சாலை, சிப்காட் சாலை போன்ற இடங்களில் போலீசார் இரவுநேர ரோந்தில் ஈடுபட்டால் மட்டுமே வழிப்பறி சம்பவங்களை தடுக்க முடியும். பைக்கில் தனியாக செல்வோரை குறி வைத்து, அவர்களை பின் தொடர்ந்து சென்று தாக்கி வழிப்பறியில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்துள்ளது.இரவுநேர வேலைக்கு சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்ப சிலர் அச்சமடைந்துள்ளனர். போதிய மின்விளக்கு வசதி இல்லாததால் துறைமுக சாலையில், தனியாக டூ வீலரில் செல்லவே மக்கள் அச்சமடைந்துள்ளனர். வழிப்பறி சம்பவங்களை தடுக்க காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ