உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / துாத்துக்குடி மீனவருக்கு இலங்கையில் அபராதம் மத்திய, மாநில அரசுகள் தலையிட வலியுறுத்தல்

துாத்துக்குடி மீனவருக்கு இலங்கையில் அபராதம் மத்திய, மாநில அரசுகள் தலையிட வலியுறுத்தல்

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் பகுதியை சேர்ந்த அந்தோணி மகாராஜா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், 12 மீனவர்களும், அந்தோணி தென் தெனிலா என்பவருக்கு சொந்தமான படகில், 10 மீனவர்களும், கடந்த மாதம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையினரால் கடந்த மாதம் 5ம் தேதி அவர்கள் கைது செய்யப்பட்டு, புத்தளம் மாவட்டம், கல்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.இதற்கிடையே, அந்தோணி மகாராஜாவுக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற, 12 மீனவர்களுக்கு, எல்லை தாண்டியதற்காக, இலங்கை கரன்சிபடி, 2 கோடி ரூபாயும், எல்லை தாண்டி மீன்பிடித்ததற்காக, ஒன்றரை கோடி ரூபாய் அபராதமும் விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது.அந்தோணி தென் தெனிலா விசைப்படகில் சென்ற, 10 மீனவர்களுக்கு 10ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. மீனவர்கள் 12 பேருக்கு, இந்திய மதிப்பில், 98.30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது, தருவைகுளம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதி மீனவ சங்க பிரதிநிதிகள் கூறியதாவது:கடந்த ஒரு மாதமாக சிறையில் உள்ள, 22 மீனவர்களையும், இரண்டு விசைப்படகுகளையும் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு தொடர்ந்து மனுக்கள் அனுப்பிய நிலையில், இதுவரை, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.வரும் 10ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும் போது, மீதமுள்ள 10 மீனவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் அபாயம் உள்ளது.எனவே, மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, மீனவர்கள் மற்றும் அவர்களது இரண்டு விசைப்படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி