திருச்செந்துார் கடலில் நீராடிய 10 பக்தர்களுக்கு கால் முறிவு
துாத்துக்குடி:திருச்செந்துார் கடலில், புனித நீராடிய பக்தர்களில், 10க்கும் மேற்பட்டோருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆடி கிருத்திகை மற்றும் விடுமுறை தினம் என்பதால், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். கோ வில் முன் கடற்கரையிலும், நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். கடலில் திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில், பக்தர்கள் சிலர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் அவர்களை போராடி மீட்டனர். கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த, 13 வயது சிறுமி அனிதா அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சாத்துாரை சேர்ந்த மாரிசாமி, திண்டிவனத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஸ்வரி, கமுதியைச் சேர்ந்த அன்னலெட்சுமி, மதுரையைச் சேர்ந்த ஆனந்தவல்லி உள்பட, 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அனைவரும், திருச்செந்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.