ஒர்க் ஷாப்பில் புகுந்த அரசு பஸ்சால் பரபரப்பு
துாத்துக்குடி; சாலையோர ஒர்க் ஷாப்பிற்குள் அரசு பஸ் புகுந்த விபத்தில், பயணியர் லேசான காயங்களுடன் தப்பினர். ஈரோடு மாவட்டம், அந்தியூரில் இருந்து அரசு விரைவு பஸ் நேற்று முன்தினம் இரவு, 40 பயணியருடன் துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாருக்கு புறப்பட்டது. ஓட்டப்பிடாரம், இந்திரா நகரைச் சேர்ந்த சொரிமுத்து, 48, பஸ்சை ஓட்டினார். எட்டையபுரம் அடுத்த எம்.கோட்டூர் விலக்கு அருகே நேற்று அதிகாலை பஸ் சென்ற போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பைக் ஒர்க் ஷாப்பிற்குள் புகுந்தது. இதில், பஸ்சின் முன்பகுதி சேதமடைந்து, சொரிமுத்து மற்றும் பயணியர் சிலர் லேசான காயங்களுடன் தப்பினர். ஒர்க் ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மூன்று வாகனங்கள் சேதமடைந்தன. எட்டையபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.