உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாமா? அமைச்சர் சேகர்பாபு பதில்

கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாமா? அமைச்சர் சேகர்பாபு பதில்

துாத்துக்குடி: ''கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் தேவையா என ஆலோசித்து முடிவெடுக்கப்படும்,'' என, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு திருச்செந்துாரில் நேற்று அளித்த பேட்டி:திருச்செந்துார் கோவில் யானை தெய்வானை தாக்கியதில் உயிரிழந்த யானை பாகன் உதயகுமார், கோவில் பணியாளர் என்பதால், அவரின் மனைவிக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப கோவிலில் பணி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அழுதது

கோவில் யானை இருவரையும் தாக்கிய சில நிமிடங்களிலேயே பழைய நிலைக்கு திரும்பி, இறந்தவர்களை பார்த்து அழுதது; குறைவாகவே உணவு எடுத்துக் கொள்கிறது. அந்த பாதிப்பிலிருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. இன்னும் ஒரு வாரம் யானையை தொடர்ந்து கண்காணித்து, பின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அரசுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.கடந்த காலங்களில் யானைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அருகிலேயே செய்யப்படாததால், புத்துணர்வு முகாம் தேவைப்பட்டது. தற்போது 26 கோவில்களில், 28 யானைகளை அறநிலையத் துறையே பராமரிக்கிறது; அவற்றிற்கு புத்துணர்வு முகாம் தேவைப்படவில்லை.வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களோடு கலந்து ஆலோசித்து, புத்துணர்வு முகாமிற்கு, கோவில் யானைகளை கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினால், அதை ஏற்க, அறநிலையத்துறை தயாராக உள்ளது.வனத்துறை சட்டத்தின் படியும், தற்போது இருக்கும் விதிகளின்படியும் வனத்துறையின் அனுமதி பெற்ற பிறகு தான், யானை தொடர்பான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

நிதியுதவி

முன்னதாக, திருச்செந்துார் கோவில் யானை தாக்கியதில் உயிரிழந்த பாகன் உதயகுமாரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாயை உதயகுமாரின் மனைவியிடம் அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.அதுபோல, யானை தாக்கியதில் இறந்த சிசுபாலனின் குடும்பத்திற்கு, 5 லட்சம் ரூபாயை அவரது குடும்பத்தினரிடம் அமைச்சர் வழங்கினார். கோவில் யானை தெய்வானையை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு, கரும்பு துண்டுகளை வழங்கினார். யானையின் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை