திருச்செந்துாரில் புதிதாக திறந்த விடுதிக்கு கட்டணம் நிர்ணயம் செய்வதில் குழப்பம்
துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு, 300 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்ட வளாக பணி நடக்கிறது. கோவிலுக்கு சொந்தமான இடத்தில், 29.16 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது.கடந்த 7ம் தேதி விடுதியை ஆய்வு செய்த அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, முதல்வர் திறந்தவுடன் பக்தர்கள் பயன்பாட்டுக்காக முன்பதிவு துவங்கும் என, அறிவித்தார். ஆனால், இதுவரை கட்டணம் நிர்ணயம் செய்வதில் குழப்பம் நீடிக்கிறது. கந்தசஷ்டி திருவிழாவிற்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால், அறநிலையத்துறை விரைந்து முடிவெடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 28 கூடுதல் படுக்கை
அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:திருச்செந்துாரில் பக்தர்கள் தங்கும் விடுதி இரண்டு தளங்களுடன், 99,925 சதுரடியில் கட்டப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதிகளுடன் இருவர் தங்கும் 100 அறைகள், ஒன்பது கட்டில்கள் கொண்ட 16 அறைகள் மற்றும் 7 கட்டில்கள் கொண்ட 12 அறைகள் என, 28 கூடுதல் படுக்கை அறைகள் உள்ளன.ஹால் மற்றும் இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய, 20 பக்தர்கள் தங்கும் குடில்கள், சமையல் அறையுடன் கூடிய உணவகம், டிரைவர்கள் ஓய்வறை, வாகனங்கள் நிறுத்துமிடம், லிப்ட் வசதி என, அனைத்து வசதிகளுடன் விடுதி அமைக்கப்பட்டுள்ளது.தங்கும் விடுதியை யார் நிர்வாகம் செய்வது என்பதில் சுற்றுலாத்துறை, அறநிலையத்துறை, கோவில் நிர்வாகம் இடையே குழப்பம் நீடிக்கிறது. கோவில் அருகிலேயே சுற்றுலாத்துறைக்கு சொந்தமான தமிழ்நாடு ஹோட்டல் இருப்பதால், அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலேயே தங்கும் விடுதி இருக்க வாய்ப்புள்ளது. நிர்ணயம் செய்ய வாய்ப்பு
ஒரு படுக்கை அறைக்கு, 200 ரூபாய் வீதம் கட்டணம் நிர்ணயம் செய்ய வாய்ப்புள்ளது. பெரிய அறைகளுக்கு, 1,500 முதல், 2,000 ரூபாய் வரையிலும் நிர்ணயம் செய்ய வாய்ப்புள்ளது. அறநிலையத்துறை அனுமதி அளித்ததும் புதிய கட்டண விபரங்களுடன் பயணியர் தங்கும் விடுதி பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.