திருச்செந்துார் கடற்கரையில் ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வு
துாத்துக்குடி:திருச்செந்துார் கோவில் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்ட பகுதிகளை, ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வு செய்தனர்.திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடற்கரையில் சென்னை ஐ.ஐ.டி., குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் இருந்து, அருகில் உள்ள அமலிநகர் வரை கடல் அரிப்பு குறித்து அவர்கள் ஆய்வு நடத்தினர். நவீன கருவியால் அவர்கள் கடற்கரை பகுதியில் ஆழம் எவ்வளவு என்பதை அறிந்தனர்.மேலும், கடல் நீரால் மணல் அரிப்பு எவ்வளவு தொலைவு ஏற்பட்டுள்ளது என்பதையும், தரை மட்டத்தில் எவ்வளவு தொலைவுக்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது; கடல் மணல் சரிவு எவ்வளவு என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். இன்னும் சில நாட்கள் ஆய்வு நடத்தப்பட்டு, அரசிடம் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என, குழுவினர் தெரிவித்தனர்.