உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / துாத்துக்குடியில் புதிய மின் நிலையம் 600 மெகா வாட் திறனில் அமைகிறது

துாத்துக்குடியில் புதிய மின் நிலையம் 600 மெகா வாட் திறனில் அமைகிறது

துாத்துக்குடி:துாத்துக்குடியில், 600 மெகா வாட் திறனில் புதிய அனல் மின் நிலையத்தை, ஏற்கனவே உள்ள துாத்துக்குடி மின் நிலைய வளாகத்திலேயே அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகம் அருகில் மின் வாரியத்திற்கு அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 210 மெகா வாட் திறனில் ஐந்து அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை, 1979 - 1991 காலகட்டத்தில் அமைக்கப்பட்டவை. தற்போது, துாத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் தலா, 660 மெகா வாட் திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. துாத்துக்குடி, திருநெல்வேலியில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம், அம்மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் புதிய தொழில் பூங்காக்களை அமைத்து வருகிறது. எனவே, தென் மாவட்டங்களில் செயல்படும் தொழில் நிறுவனங்களுக்கு சீராக மின் வினியோகம் செய்ய, துாத்துக்குடியில், 600 மெகா வாட் திறனில் புதிய அனல் மின் நிலையம் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக, துாத்துக்குடி அனல் மின் நிலைய வளாகம், உடன்குடி உட்பட நான்கு இடங்கள் அடையாளம் காணப்பட்டன. அதன் அடிப்படையில், மின் வழித்தடம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் ஏற்கனவே இருப்பதால், துாத்துக்குடி மின் நிலைய வளாகத்தில், புதிய அன் மின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'புதிய மின் நிலையத்திற்கு, நான்கு இடங்களில் சாத்தியக்கூறு ஆய்வு நடக்கிறது. அதில், துாத்துக்குடி மின் நிலைய வளாகம் சாதகமாக உள்ளது; நான்கு இடங்களில் ஒன்றை தேர்வு செய்து, அரசு அறிவிக்கும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !