அசல் ஆவணங்களுக்கு தாமதம் ரூ.5.10 லட்சம் இழப்பீடுக்கு உத்தரவு
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா வடக்குப்பட்டியைச் சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணன், 61, என்பவர் கோவில்பட்டியில் உள்ள, ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் விவசாய தொழிலுக்காக, டிராக்டர்கடன் பெற்றுள்ளார். அதற்காக தன் சொத்துக்களின் அசல் ஆவணங்களை வங்கியில் கொடுத்தார். வங்கிக் கடன் முழுதையும் அவர் செலுத்திய நிலையில், சொத்துக்களின் அசல் ஆவணங்களை திரும்ப தருமாறு, வங்கி நிர்வாகத்திடம் கேட்டார். ஆனால், பல ஆண்டுகள் கழித்து தாமதமாக வழங்கியது.இதுகுறித்து, துாத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பாலகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஆணைய தலைவர், பாலகிருஷ்ணனுக்கு சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக, 5 லட்சம் ரூபாய், வழக்கு செலவுத் தொகை 10,000 ரூபாய் என மொத்தம் 5 லட்சத்து 10,000 ரூபாயை வழங்க உத்தரவிட்டனர்.