ஜி.ஹெச்.,சில் நோயாளிக்கு கெட்டுப்போன பிரெட்
துாத்துக்குடி:அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு கெட்டுப்போன பிரெட் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தினமும், ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாகவும், 300 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர் . உள்நோயாளி களாக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு பிரெட், பால் இலவசமாக வழங்கப்படுகிறது. அதன்படி, மகப்பேறு பிரிவில் சிகிச்சை பெற்ற பெண் ஒருவருக்கு, செப்., 22ல் வழங்கப்பட்ட பிரெட், மறுநாள் காலை பூஞ்சை காளான் உருவாகி கெட்டுப்போனதாக இருந்தது. அவர் மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். மருத்துவமனை தரப்பில் சரியான பதில் இல்லாததால், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மற்றும் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் கோவில்பட்டி சப் - கலெக்டர் ஹிமான்ஷு மங்களிடம் நேற்று புகார் மனு அளித்தனர்.