உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / சிறுமியை தீயிட்டு கொல்ல முயன்ற இரு வாலிபர்கள் சிறையிலடைப்பு

சிறுமியை தீயிட்டு கொல்ல முயன்ற இரு வாலிபர்கள் சிறையிலடைப்பு

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டத்தில் 17 வயது சிறுமியை எரித்துக் கொல்ல முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.துாத்துக்குடி மாவட்டம், இளம்பவனம் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் --- காளியம்மாள் தம்பதிக்கு இரு மகன்கள் மற்றும் 17 வயதில் மகள் உள்ளார். கணவரை பிரிந்த காளியம்மாள், குழந்தைகளுடன் பரமக்குடியில் வாழ்கிறார்.அங்கு அவரது, 17 வயது மகளுடன் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ், 23, என்பவர் நெருங்கி பழகியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தன் மகளை எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரத்தில் உள்ள தன் தாய் முனியம்மாள் வீட்டிற்கு காளியம்மாள் அனுப்பி வைத்தார். அங்கு அந்த சிறுமி இருந்த நிலையில், 23ம் தேதி சிறுமியின் அலறல் சத்தம் கேட்டது. அங்கிருந்தவர்கள் சென்று பார்த்தனர். உடலில் தீப்பற்றிய நிலையில் கூச்சலிட்ட அந்த சிறுமியை மீட்ட அவர்கள், துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் விசாரித்தபோது, இரு வாலிபர்கள் வந்து சென்றது தெரிய வந்தது. போலீசாரிடம் சிறுமி அளித்த வாக்குமூலத்தில், 'சந்தோஷிடம் தொடர்ந்து பேச வேண்டும் என அவரும், அவரது நண்பர் முத்தையா என்பவரும் தொந்தரவு கொடுத்தனர். மறுப்பு தெரிவித்ததால், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்' என்றார்.எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிந்து, சந்தோஷ், முத்தையா ஆகிய இருவரையும் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !