சிட்கோவிற்கு சொந்தம் கொண்டாடி கிராம மக்கள் மறியல், கடையடைப்பு
துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே புதிய தொழிற்பேட்டை அமைக்க லிங்கம்பட்டி மற்றும் குலசேகரபுரம் பஞ்., பகுதிகளில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இரு பஞ்., பகுதிகளிலும் சிட்கோ வருவதால், அதற்கான உரிமம் கொண்டாடுவதில் போட்டி ஏற்பட்டுள்ளது.சிட்கோவில் அமையும் நிறுவனங்கள், பஞ்., நிர்வாகத்திடம் அனுமதி பெறுவது அவசியம் என்பதால், தங்கள் பஞ்சாயத்தில் அனுமதி பெற வேண்டும் என, இருதரப்பிலும் வலியுறுத்தப்படுகிறது.சிட்கோ பகுதியில் உரிய அளவீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குலசேகரபுரம் பஞ்., மக்கள் கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். அதன்படி, அதிகாரிகள் அப்பகுதியில் அளவீடு செய்ய சென்றனர்.ஆனால், முறையாக எவ்வித தகவலும் தெரிவிக்காமல் அளவீடு செய்யக்கூடாது; முறையான உத்தரவு பெற்று அதற்கு பின் அளவீடு செய்ய வேண்டும் என, லிங்கம்பட்டி பஞ்., மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில், தமிழக அரசு அறிவித்தபடி, லிங்கம்பட்டி பஞ்.,சில் தான் சிட்கோ தொடர வேண்டும் என வலியுறுத்தி, நேற்று கடைகளை அடைத்து, கோவில்பட்டி -- கடலையூர் சாலையில், 300க்கும் மேற்பட்டோர் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.பேச்சு நடத்த சென்ற அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.