துாத்துக்குடியில் தொழிலாளி அடித்து கொலை
துாத்துக்குடி:துாத்துக்குடி அருகே ஏ. கைலாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணராஜ், 52. மரம் வெட்டும் தொழிலாளி. ஆடு, மாடு மேய்ப்பதும் வழக்கம். இந்நிலையில், வீட்டில் இருந்து நேற்று முன்தினம் வெளியே சென்ற சரவணராஜ் இரவு வரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடிப் பார்த்ததில், அவர் ஏ. கைலாசபுரம் வடக்கே உள்ள காட்டுப்பகுதியில் சடலமாகக் கிடந்தார். வழக்குப்பதிவு செய்த சிப்காட் போலீசார், நேற்று சரவணராஜின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதற்கிடையே, சரவணராஜை அடித்துக் கொலை செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த முருகன், 44, என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது:காட்டுப்பகுதியில் மரம் வெட்டுவது தொடர்பாக சரவணராஜிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் பிரச்னை இருந்தது. மீண்டும் அவர்களுக்குள் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த முருகன் கம்பால் சரவணராஜின் தலையில் தாக்கியதில் அவர் இறந்தார். முருகனை கைது செய்து விசாரிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.