மேலும் செய்திகள்
வீட்டின் மீது இடி தாக்கி மின்பொருட்கள் எரிந்து நாசம்
14 hour(s) ago
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது
04-Oct-2025
நிலத்தகராறில் சித்தப்பாவை வெட்டி கொன்ற மகன் கைது
01-Oct-2025
திருப்பத்துார்:வேலுார், திருப்பத்துார் மாவட்ட வனப்பகுதியையொட்டி சிறுத்தை ஒன்று மூன்று மாதங்களாக சுற்றி வருகிறது. அவ்வப்போது கிராமங்களில் புகுந்து ஆடுகளை கடித்து வந்தது. கடந்த, 5ம் தேதி வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ராமாலை பஞ்சாயத்திற்குட்பட்ட காந்தி கணவாய் கிராமத்தில் புகுந்து, மூன்று நாட்களாக அப்பகுதியில் சிறுத்தை, இரவில் நடமாடியது. அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து கிராம மக்கள், குடியாத்தம் வன அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.இந்நிலையில், நேற்று மாலை, 3:00 மணியளவில், திருப்பத்துார் நகரின் மையப்பகுதியில் உள்ள சாமன் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு செல்வதற்குள், அந்த சிறுத்தை அருகில் உள்ள மேரி இம்மாகுலேட் பள்ளியில் புகுந்து, வாட்ச்மேன் கோபால், 61, என்பவரை தாக்கியது.இதில், அவரது இடது பக்க காது, தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் கூச்சலிட்டதால், ஊழியர்கள், ஆசிரியர்கள் கோபாலிடம் விசாரித்தனர். அவர் பள்ளி வளாகத்தில் சிறுத்தை நுழைந்துள்ளதாக தெரிவித்தார்.இதையடுத்து, ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் அலறியடித்து ஓடிச்சென்று வகுப்பறையில் புகுந்து, கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டனர். காயமடைந்த கோபாலை, திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.தகவலறிந்த மாவட்ட வனச்சரக அலுவலர் சோழராஜன் தலைமையில், 20க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் பள்ளிக்கு சென்று, பள்ளி வளாகத்தில் மறைவான இடத்தில் சிறுத்தை பதுங்கி இருப்பதை உறுதி செய்தனர்.அனைத்து மாணவ - மாணவியரையும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சிறுத்தையை வலை வீசி பிடிக்க முயற்சி செய்தபோது, சிக்காமல் வனத்துறையினருக்கு அது போக்கு காட்டியது. அருகில் குடியிருப்பு பகுதிகள் நிறைந்திருப்பதாலும், ஓய்.எம்.சி., - சி.எஸ்.ஐ., - தோனி சாவியோ என, மூன்று பள்ளிகள் அருகருகே உள்ளதாலும், சிறுத்தை தப்பிச் செல்லாத வகையில் வலைவீசி பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டினர்.மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க முடியுமா என, வனத்துறையினர் கால்நடை டாக்டர்களுடன் இணைந்து முயற்சித்தனர். பள்ளி வேலை நேரத்தில், ஆயிரக்கணக்கான மாணவ - மாணவியர் பள்ளிக்குள் இருந்த போது, சிறுத்தை புகுந்தது திருப்பத்துாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
14 hour(s) ago
04-Oct-2025
01-Oct-2025