வாணியம்பாடி : வாணியம்பாடியில், ரயில்வே மேம்பாலம் அமைக்கக்கோரி நேற்று, வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி நகர பகுதியில், சார் பதிவாளர் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், பஜார் வீதிகள், ஜி.ஹெச்., போன்றவையும், நியூ டவுன் பகுதியில், பள்ளிகள், நகராட்சி அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களும் அமைந்துள்ளன. இதனால் தினமும், வாணியம்பாடி மற்றும் நியூ டவுன் பகுதிக்கு இடையிலுள்ள ரயில்வே கேட்டை, 10,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து சென்று வருகின்றன. ரயில் வழித்தடத்தில் தினமும், சென்னை - பெங்களூரு மற்றும் சென்னை - கோவை செல்லும் ரயில்கள் என, 100 க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. சில நேரங்களில், 5 அல்லது 6 ரயில்கள், ஒரு சில நிமிட இடைவெளியில் தொடர்ந்து செல்வதால், இந்த ரயில்வே கேட், ஒரு மணி நேரத்திற்கும் மேல் தொடர்ந்து மூடப்படுகிறது. இதனால், இப்பகுதி வழியாக சென்று வரும் பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்றவை சிக்கி தவிக்கின்றன. எனவே, அங்கு ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டி, அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுவரை அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், வாணியம்பாடியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, வாணியம்பாடி அனைத்து தொழில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று ஒரு நாள், மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், காலை, 9:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடத்தினர். மேலும், எல்.ஐ.சி., அலுவலகம் முன்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.