இரவில் தொடர்ந்து மின்வெட்டு கண்டித்து கிராம மக்கள் மறியல்
திருப்பத்துார், திருப்பத்துார் மாவட்டம், மாடப்பள்ளி பஞ்., அம்பேத்கர் புரத்தில் கடந்த, 15 நாட்களாக மாலை, 6:00 மணி முதல், இரவு, 11:00 மணி வரை மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள், தொடர் மின்தடையால் மாணவர்கள், முதியவர்கள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவதால், அதை சரிசெய்ய மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில், அம்பேத்கர்புரத்தில், ஜலகம்பாறை மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், திருப்பத்துார் தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். போலீசார், மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் பேசி உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்ததால், அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.