உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பட்டியில் புகுந்து கடித்த தெருநாய்கள் தப்பி ஓடிய 17 ஆடு கிணற்றில் விழுந்து பலி

பட்டியில் புகுந்து கடித்த தெருநாய்கள் தப்பி ஓடிய 17 ஆடு கிணற்றில் விழுந்து பலி

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், காங்கேயம், மறவம்பாளையம், செம்மண்குழியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி, 48. தான் வளர்த்து வந்த செம்மறி ஆடுகளை பட்டியில் நேற்று முன்தினம் அடைத்து விட்டு சென்றார். அதிகாலை அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய்கள், பட்டிக்குள் நுழைந்து ஆடுகளை கடிக்க முயன்றன. நாய்களிடமிருந்து தப்புவதற்காக தெறித்து ஓடிய ஆடுகள், 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தன.நேற்று காலை, பட்டியில் ஆடுகள் இல்லாததை பார்த்து பொன்னுசாமி அதிர்ச்சியடைந்தார். கிணற்றில் இருந்து ஆடுகள் அலறும் சத்தம் கேட்டு, சென்று பார்த்த போது, பல ஆடுகள் இறந்த நிலையிலும், சில உயிருக்கு போராடிக் கொண்டும் இருந்தன.காங்கேயம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து, கிணற்றுக்குள் இறங்கி ஆடுகளை மீட்டனர். இதில், அதிகமாக தண்ணீர் குடித்த, 17 ஆடுகள் இறந்தன. இரு நாட்களுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த அப்புகுட்டி என்பவரின் மூன்று ஆடுகளை தெருநாய் கடித்துக் கொன்றது. இது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட செயலர் குமார் கூறியதாவது:சமீபகாலமாக திருப்பூர் மாவட்டத்தில் தெரு நாய்கள் கூட்டமாக சேர்ந்து, ஆடுகள், கன்று குட்டிகளை கடித்து கொன்று வருகின்றன. நாய்கள் பிரச்னையில், நாங்கள் பொறுப்பு இல்லை என, கால்நடைதுறை தெரிவித்து விட்டது. உள்ளாட்சி அமைப்புகளும் கவலைப்படுவதில்லை. இழப்பு ஏற்படும் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தொடரும்

போராட்டம்தெருநாய்களால், கால்நடைகள் இறப்பு தொடர்கிறது. சமீபத்தில் நாய்களால் பலியான ஆடுகளின் உடலை வைத்து கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதேபோல் தாலுகா அலுவலகங்களிலும் போராட்டம் நடத்தி உள்ளனர். தெருநாய்களின் கொலைவெறி தாக்குதலை தடுக்க முடியாமலும், ஆடுகள் மற்றும் கால்நடை இழப்பைத் தாங்க முடியாமலும் விவசாயிகள் தவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை