உடுமலை;உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், கிடப்பில், போடப்பட்டுள்ள ரவுண்டானா அமைக்கும் பணியை முழுமயைாக செயல்படுத்த வேண்டும்.உடுமலை நகரில், போக்குவரத்து நெரிசல் முக்கிய பிரச்னையாகவே உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில், அமைந்துள்ள நகரத்தில், ரோட்டோரத்தில், தற்காலிக, நிரந்தர ஆக்கிரமிப்புகளால் சிக்கல் ஏற்படுகிறது.பிரதான ரோடுகளின் இருபுறங்களிலும் அமைந்துள்ள வணிக வளாகங்கள், கடைகளில், விதிமுறைப்படி, 'பார்க்கிங்' வசதி இல்லை. எனவே, தேசிய நெடுஞ்சாலை மற்றும் இதர ரோடுகள் குறிப்பிட்ட அளவு, இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக, மாற்றப்படுகிறது.திருப்பூர் ரோடு, தளி ரோடு மற்றும் தாராபுரம் ரோடு சந்திப்பு பகுதியில், ரவுண்டானா அமைப்பதற்கான திட்ட வரைவு தயாரிக்கப்பட்டது.பழைய பஸ் ஸ்டாண்ட், காமராஜர் சிலை சந்திப்பில், தற்போது, இரு வழி மற்றும் ரவுண்டானா அமைந்துள்ளது. இதனால், பொள்ளாச்சி ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள், தாராபுரம் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் திரும்பும் போது, நெரிசல் ஏற்படுகிறது.அதே போல், மற்றொரு வழித்தடமும் உள்ளதால், குழப்பம் ஏற்படுகிறது. பழைய பஸ் ஸ்டாண்டில், பஸ்களும் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கும் போது, மூன்று வழித்தடங்களிலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதற்கு தீர்வு காண, விரிவான ஆய்வு செய்து, புதிதாக ரவுண்டானா அமைக்கவும், பஸ் ஸ்டாப் மாற்றம், ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரோடு விரிவாக்கம், இரு புறமும் பஸ்கள் நிற்கும் வகையில், 'பஸ் பே' உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.