| ADDED : ஜூலை 30, 2024 02:16 AM
- நமது நிருபர் -வாய்க்காலை மீட்டுத்தரக்கோரி, மடத்துக்குளம் தாலுகா, காரத்தொழுவு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் திரண்டு வந்து, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தனர். விவசாயிகள் கூறியதாவது:மடத்துக்குளம் தாலுகா, காரத்தொழுவு கிராமம் ராஜவாய்க்கால் மடை எண், 50 மற்றும் 52 வழியாக, 20க்கும் மேற்பட்ட விவசாயிகளின் 50 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசனம் பெற்றுவந்தன.20 அடி அகல ஆரணி வாய்க்கால் வாயிலாக, தண்ணீர் எடுத்தும், வாய்க்கால் கரையை பயன்படுத்தி, விளை பொருட்களை வாகனங்களில் எடுத்துச்சென்றோம்.கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆரணி வாய்க்காலில் தண்ணீர் எடுத்து பயன்படுத்தும் சில பெரிய விவசாயிகள், வாய்க்காலை அழித்து, ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர். வாய்க்காலை அளவீடு செய்யவந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி, இடையூறு செய்தனர்.இலவச மின் இணைப்பை பயன்படுத்தி, அமராவதி ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக தண்ணீர் திருடி, தங்கள் விவசாய நிலங்களுக்கு கொண்டுவருகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும், மின்வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.கடைமடை விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுவருகிறோம். ஆரணி வாய்க்காலை ஆக்கிரமிப்பிலிருந்து அகற்றி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவேண்டும்.வாய்க்காலை அளவீடு செய்வதற்கான கட்டணம் செலுத்தி இரண்டு ஆண்டுகளாகிறது; வாய்க்காலை உடனடியாக அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.