''ஒரு மனிதனுக்குள் இருக்கும் முழுமையை வெளிக்கொணர்தல்; ஒவ்வொருவரும் உழைத்து, சம்பாதித்து தங்கள் சொந்தக்காலில் நிற்க சொல்லி தருதல்; உண்மை, சத்தியத்தில் துணிவுடன் இருத்தல்'' என்ற மகாத்மா காந்தி வகுத்து தந்த ஆதாரக்கல்வியின் கோட்பாடுகளை மனதில் நிறுத்தி 1930ல், ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா என்ற பள்ளியை ஸ்தாபித்தார் திருப்பூரைச் சேர்ந்த அவிநாசிலிங்கம் செட்டியார்.அவரது வளர்ப்பு மகனும், அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக வேந்தருமான மீனாட்சிசுந்தரம் கூறியதாவது:பெரும் செல்வந்தரான அவர், ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு எளிய வாழ்க்கை வாழ்ந்தார். காந்திய வழியில், இந்திய சுதந்திர போராட்ட இயக்கத்தில் இணைந்து, ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட பேராட்டங்களில் பங்கேற்று, 1930 முதல், 1942 வரை நான்கு முறை சிறை சென்றுள்ளார்.ஹரிஜனங்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபட்டார்; விதவைகள் மறுமணத்துக்கு போராடினார். காந்தியடிகளை அழைத்து வந்த ஒரு நாளேனும் தனது வித்யாலயத்தில் தங்க வைக்க வேண்டும் என்ற அவரது ஆசை, 1934, பிப்., 6ம் தேதி நிறைவேறியது; திருப்பூர் வந்த காந்தியடிகள், வித்யாலயத்தில் தங்கினார்; 'தனது சொந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வு இந்த வித்யாலயத்தில் இருக்கிறது' என காந்தியடிகள் கூறியிருக்கிறார்.பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்திற்கு, 150 ஏக்கர் நிலம்; அவிநாசிலிங்கம் பல்கலை அமைக்க, 116 ஏக்கர்; வேளாண் அறிவியல் நிலையம் அமைக்க, 50 ஏக்கர்; கே.எஸ்.சி., பள்ளி; பழனியம்மாள் உயர்நிலைப்பள்ளி அமைக்க, 3 ஏக்கர்; டி.எஸ்.கே., மகப்பேறு மருத்துவமனை, பெரிச்சிப்பாளையத்தில் தீயணைப்பு நிலைய கட்டடம் செயல்பட்ட நிலம் போன்றவையும் அவரது குடும்பத்தினர் நன்கொடையாக வழங்கிய இடங்கள் தான்.கடந்த, 1946ல் முதல் கல்வியமைச்சராக பொறுப்பேற்று, தமிழ் வளர்ச்சி கழகத்தை உருவாக்கினார். 1952ல், திருப்பூர் எம்.பி.,; 1958 முதல், 1964 வரை மாநிலங்களவை உறுப்பினர் என பல பதவிகளை வகித்திருக்கிறார். அவரின் சேவைக்காக, 1970ல், இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.