ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு
திருப்பூர்; திருப்பூரில், வடமாநிலங்களுக்கு செல்ல கூடிய பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பாக பயணிக்க ரயில்வே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.ஹோலி பண்டிகையையொட்டி வடமாநிலத்தினர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக, தொழிலாளர் நகரமான திருப்பூரில் இருந்து ஏராளமான வடமாநிலத்தினர் ரயில்களில் சென்று வருகின்றனர். இதையொட்டி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட வடமாநிலத்தினர் பாதுகாப்பாக பயணம் செய்ய ரயில்வே ஐ.ஜி., உத்தரவின் பேரில், ரயில்வே ஸ்டேஷன்களில் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களாக திருப்பூர் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ருவந்திகா தலைமையிலான போலீசார் பிளாட்பார்மில் காத்திருந்த பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதில், தண்டவாள பாதையை கடந்து செல்ல கூடாது, மொபைல் போனில் பேசியபடி கவனக்குறைவாக நடந்து செல்ல கூடாது.நடைபாதை மேடையின் மீது சிறுவர்களை விளையாட விட கூடாது, ஓடும் ரயிலில் ஏறவோ, இறங்கவோ கூடாது என பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.