| ADDED : மே 18, 2024 12:48 AM
பல்லடம்:பல்லடம் அருகே, சொந்த செலவில் ஓடையை துார்வாரிய பொதுமக்கள், இதுதான் உண்மையான, 'நமக்கு நாமே' திட்டம் என கருத்து தெரிவித்துள்ளனர்.பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சாய்குரு கார்டன் மற்றும் அமராவதி நகர் உள்ளது. குடியிருப்புகளை ஒட்டியுள்ள நீரோடை, பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுகள், முட்புதர்கள், சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது.ஓடையை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்பினர் பலமுறை கோரிக்கை விடுத்தும், நடவடிக்கையும் எடுக்காததை தொடர்ந்து, பொங்கி எழுந்த பொதுமக்கள், ஓடையை துார்வார களம் இறங்கினர்.பொதுமக்கள் கூறியதாவது:குடியிருப்பு அருகே உள்ள ஓடையால், கடும் துர்நாற்றம், நோய் தொற்று அபாயம் ஏற்பட்டு வருகிறது. ஓடையை துார்வார வேண்டும் என பலமுறை வலியுறுத்தி உள்ளோம். இருப்பினும், 2016 முதல் ஓடை துார்வாரப்படவில்லை.எனவே, குடியிருப்பினர் அனைவரின் பங்களிப்புடன் நிதி திரட்டி அகழ் இயந்திரம் பயன்படுத்தி ஓடையை துார்வாரும் பணி மேற்கொண்டு வருகிறோம்.இதுதான் உண்மையான, 'நமக்கு நாமே' திட்டமாகும். ஓடையின் ஒரு புறத்தை நாங்களே துார்வாரி விட்டோம். இனியாவது, மாவட்டம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் விழித்துக் கொண்டு, ஓடையை முழுமையாக துார்வார வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.