திருப்பூர்;பிளஸ்2 முடித்து உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத ஏழை மாணவர்களின் கல்லுாரி சேர்க்கைக்கு வாரி வழங்கிய தொழில் அமைப்பினருக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்துள்ளார்; கல்விக்கண் திறக்க, மேலும் கூடுதல் நிதி வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் உயர்கல்விக்கு செல்ல வேண்டும் என்பதில் மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது.உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கான ஆலோசனை முகாம், கடந்த ஜூன் 29ம் தேதி, கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.இம்முகாம் மூலம், கல்லுாரி கட்டணம் செலுத்த முடியாத மற்றும் பெற்றோர் இல்லாத, 200 மாணவர்கள், கல்லுாரிகளில் நேரடியாக சேர்க்கப்பட்டு பயனடைந்துள்ளனர். இவர்களில், 115 மாணவர்கள், மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால், தொழில் நிறுவனங்களிடமிருந்து நிதியுதவி பெற்று, கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர்.தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., - நர்சிங் கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான இரண்டாம்கட்ட முகாம், கலெக்டர் அலுவலக வளாகம், அறை எண் 704ல் நடைபெற உள்ளது. வரும் 25, 26, 27, 28ம் தேதிகளில், காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை, மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி மையம் செயல்பட உள்ளது.இது குறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட அறிக்கை:பிளஸ் 2 தேர்ச்சி பெற்றும், உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களின் கல்லுாரி சேர்க்கைக்காக, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், கே.எம்., நிட்வேர், ஓட்டல் அசோசியேஷன், மார்க்கெட் குமார், இந்திரா சுந்தரம், பிருத்வி இன்னர் வேர்ஸ், கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம், பெஸ்ட் கார்பரேஷன், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், இந்திய மருத்துவ கழக சார்பில், சமூக பங்களிப்பு நிதியிலிருந்து, பிளஸ்2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாவட்ட நிர்வாகம் நன்றி தெரிவிக்கிறது.கல்லுாரி கட்டணம் செலுத்த இயலாத, ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக, தொழில் நிறுவனங்கள், தொழில் அமைப்புகள், தன்னார்வலர்கள் சமூக பங்களிப்பு நிதியை தாராளமாக வழங்க முன்வர வேண்டும்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.