கோவிலில் புது மண்டபம் பக்தர்கள் எதிர்பார்ப்பு
உடுமலை; கொழுமம் தாண்டேஸ்வரர் கோவில் அருகில், இடிக்கப்பட்ட திருமண மண்டபத்துக்கு மாற்றாக, புதிய மண்டபம் கட்ட பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மடத்துக்குளம் தாலுகா கொழுமத்தில், பழமை வாய்ந்த தாண்டேஸ்வரர் கோவில் மற்றும் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் அருகருகே அமைந்துள்ளது.அமராவதி ஆற்றங்கரையில் அமைந்து, பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய, இந்த கோவில்களுக்கு, பிற மாவட்டங்களில் இருந்தும், அதிகளவு பக்தர்கள் வந்து செல்கின்றனர்.ஆருத்ரா தரிசனம் உட்பட சிறப்பு பூஜைகள், விமரிசையாக கொண்டாடப்படுகிறது.இரு கோவில்களிலும், இடையில் பக்தர்களின் வசதிக்காக, முன்பு ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருமண மண்டபம் கட்டப்பட்டிருந்தது. மண்டபத்தில், பக்தர்கள் விசேஷங்கள் நடத்தவும் அனுமதித்தனர்; கோவில் விசேஷங்களின் போதும் பயன்படுத்தி வந்தனர்.தொடர் பராமரிப்பு இல்லாத காரணத்தால், மண்டபம் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியது. பாதுகாப்பு கருதி இந்த மண்டபம் இடித்து அகற்றப்பட்டது. பின்னர் புதிய மண்டபம் கட்டப்படவில்லை.பக்தர்கள் கூறுகையில், 'பிரசித்தி பெற்ற இக்கோவில்களுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக, புதிதாக மண்டபம் கட்டப்பட வேண்டும். கொழுமம் வழியாக பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கும், மண்டபம் பயனுள்ளதாக இருக்கும். இது குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.