உடுமலை;விவசாய நிலங்களில், தேனீ வளர்த்தால், பயிர் மகசூல் அதிகரிப்பதோடு, கூடுதல் வருவாய் கிடைக்கிறது. தேனீ வளர்ப்பை ஊக்குவிக்க, தோட்டக்கதலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் அறிக்கை வருமாறு:பயிர்களில் மகசூல் அதிகரிப்பதற்கும், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் தேனீ வளர்ச்சி சிறந்த வழிமுறையாகும். தேனீ வளர்ப்பை சிறிய அளவில் துவங்குவதே சரியானதாகும்.ஓரளவு பயிற்சியும், அனுபவமும் பெற்ற பின், சாதகமான சூழல் உள்ள இடங்களில், வணிக ரீதியில் அதிகரிக்கலாம். குறைந்தது இரண்டு கூட்டங்களுடன், அடுக்கு தேனீ இனங்களை மட்டுமே பெட்டிகளில் வளர்க்க முடியும். தமிழகத்தில், குமரி மாவட்டத்தில் இந்திய தேனீக்கள் அதிகம் வளர்க்கப்படுகின்றன. சமவெளி ரகத்தை சமவெளியிலும், மலை ரகத்தை மலைப்பகுதியிலும் வளர்க்க வேண்டும்.தேனீ பண்ணை அமைக்க, தேனீக்களுக்கும், தேனீ வளர்ப்போர்க்கும் ஏற்ற இடமாக இருக்க வேண்டும். தேனீக்கள் இயற்கையாக எந்தெந்த இடங்களில் அதிகமாக இருக்கிறதோ, அந்த இடத்தை தேர்வு செய்யலாம்.அந்த இடத்தை சுற்றிலும், 2 கி.மீ., சுற்றளவில் தேனீக்களுக்கு தேவையான மதுரம் மற்றும் மகரந்தம் தரும் செடி, கொடிகள் இருக்க வேண்டும். கூட்டின் வெப்ப நிலை, தேனின் கெட்டித்தன்மையை குறைக்க, தேனீக்களுக்கு தூய்மையான நீர் அவசியம்.எனவே, அருகில், கிணறு, ஓடை, வாய்க்கால் என எதாவது ஒரு நீர் நிலை இருக்க வேண்டும். அதோடு, அதிக வெயில், காற்று, கனமழை ஆகியவை பணித்தேனீக்களின் உணவு திரட்டும் திறனை பாதிப்பதால், தேனீக்களின் வளர்ச்சிக்கு உகந்த பருவநிலை உள்ள இடமாகவும், மனிதர்கள், கால்நடைகள் அதிகம் இல்லாத பகுதியாக இருக்க வேண்டும்.தேனீ பெட்டிகளை நிழலில், கிழக்கு பார்த்து, ஓடு போட்ட தாழ்வாரம், கீற்று கொட்டகை, மரம், புதர் ஆகியவற்றின் கீழ், வெயில் படாமல் வைக்க வேண்டும். தேனீ பெட்டிகளுக்கிடையே, ஆறு அடி இடைவெளியும், சமதளமான தரையில் வைக்க வேண்டும்.பெட்டியில் உள்ள தேனீக்களை அவ்வப்போது திறந்து பார்த்து, அவற்றின் நிலை அறிய வேண்டும். ராணி தேனீயின் செயல்பாட்டை அறிந்து, தேன் மற்றும் மகரந்த இருப்பு நிலையை அறிந்து கொள்ள வேண்டும். தேனீக்களின் தேவைக்கு ஏற்ப செயற்கை முறையில் உணவு கொடுக்கவும், பழைய கருத்த அட்டைகளை நீக்கவும், பூச்சி நோய் தாக்குதல் அறியவும், தேன் சேர்த்து வைத்துள்ளதா என்பதை அறியவும், பெட்டிகளைத் திறந்து பார்த்து ஆய்வு செய்ய வேண்டும். உணவு தரும் பயிர்கள்
புளிய மரம், இலவம், இலுப்பை, சில்வர் ஓக், அகத்தி, அரப்பு, கடுக்காய், வேம்பு, புங்க மரம், குதிரை மசால், நாவல், வாகை, கொடுக்காப்புளி, பனை, தென்னை, தக்காளி, கத்தரி, வெள்ளரி, கொய்யா, சப்போட்டா, வாழை, முருங்கை, வெங்காயம், காலிபிளவர், முட்டைகோஸ், கொத்தமல்லி ஆகியவை உள்ள பகுதியில் வளர்த்தால், அதிக தேன் சேகரிக்க முடியும்.தேனீ வளர்ப்பு குறித்து, கோவை வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் பொங்கலூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிற்சி வழங்கப்படுகிறது.மடத்துக்குளம் வட்டாரத்தில், நடப்பு ஆண்டு, தோட்டக்கலைத் துறை வாயிலாக, தேசிய தோட்டக்கலை இயக்ககத்தில், அயல் மகரந்தச் சேர்க்கை அதிகரித்தல் இனத்தின் கீழ், 200 தேனீ பெட்டிகள், தேனீக்களுடனும், 20 தேன் பிழியும் கருவியும் மானியத்தில் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், சிட்டா, அடங்கல், உரிமைச் சான்று, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 2 ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.மேலும் விபரங்களுக்கு, தோட்டக்கலை அலுவலர்கள் தாமோதரன் 96598 38787; நித்யராஜ் 63821 29721 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.