| ADDED : ஜூன் 30, 2024 01:57 AM
திருப்பூர்;லோக்சபா தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய, வேட்பாளர்களுக்கு, வரும் 3 ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.திருப்பூர் லோக்சபா தொகுதியில், 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். போட்டியிட்ட வேட்பாளர், அதிகபட்சமாக, 95 லட்சம் ரூபாய் தேர்தல் செலவு மேற்கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று துவங்கி, அடுத்த மாதம் ஜூலை 3ம் தேதி வரை, தேர்தல் கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.தேர்தலின் போது நியமிக்கப்பட்டிருந்த தேர்தல் பார்வையாளர் அசோக்குமார், இன்று திருப்பூரில் முகாமிடுகிறார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) அலுவலக அதிகாரிகள், கணக்கு தாக்கல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.கலெக்டர் அலுவலகத்தில், 3ம் தேதி வரை வேட்பாளரின் செலவு கணக்கு தாக்கல் பணி நடக்க உள்ளது. செலவு கணக்கு தாக்கலில் ஏதாவது குழப்பம் இருந்தாலும், வேட்பாளர் அதனை நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.