உடுமலை:உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள உளுந்து விதைப்பண்ணைகளை விதைச்சான்று உதவி இயக்குனர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில், குறுகிய கால சாகுபடி, குறைந்த நீர்த்தேவை, குறைந்த சாகுபடி செலவில் அதிக வருவாய் உள்ளிட்ட காரணங்களினால், பயறு வகை பயிர்கள் சாகுபடியில் தற்போது விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.பயறு வகை சாகுபடியில், குறிப்பாக உளுந்து சாகுபடி அதிகரித்துள்ளது. இதில், சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவதால், அதிக முளைப்புத்திறன், சீரான வளர்ச்சி, ஒரே நேரத்தில் காய்த்து அறுவடைக்கு வருதல் மற்றும் அதிக மகசூல் என சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவதில் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.மடத்துக்குளம் சங்கராமநல்லுார் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள, வம்பன், 8,9,11 ஆகிய ரக உளுந்து விதைப்பண்ணைகளை திருப்பூர் மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம் ஆய்வு மேற்கொண்டார். விதைச்சான்று அலுவலர் ஷர்மிளா மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.விதைச்சான்று உதவி இயக்குனர் கூறியதாவது :உலக அளவில் உளுந்து உற்பத்தி மற்றும் பயன்பாட்டில், இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில், சுமார் 4.83 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, 3.36 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.தமிழகத்தில், 4.30 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, 3.11 லட்சம் டன் உளுந்து உற்பத்தி செய்யப்படுகிறது.உளுந்து சாகுபடியில் மஞ்சள் தேமல் நோய் பெரும் பிரச்னையாக உள்ளது. இந்த நோய்க்கு எதிர்ப்புத்திறன் தரக்கூடியதாகவும், அதிக மகசூல் தரும் வம்பன் -11 ரகம், 70 முதல், 75 நாட்கள் சாகுபடி காலமாகும்.அதிக காய்ப்புத்திறன், அதிக மணி எடை கொண்டதால், அதிக மகசூல் தருகிறது. காரீப், ராபி பருவங்களிலும், மானாவாரி மற்றும் நீர்ப்பாசனம் உள்ள பகுதி என அனைத்து கால நிலைகளிலும் சாகுபடி செய்யலாம்.அதே போல், வம்பன் -8 ரகம், 65 முதல், 70 நாட்களில் அதிக மகசூல் தருகிறது. உளுந்து பயிரில் அமைக்கப்பட்டுள்ள விதைப்பண்ணைகளில் பூப்பருவம் மற்றும் முதிர்ச்சிப்பருவங்களில் விதைச்சான்று அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.அப்போது, பிற ரக கலவன்கள் நீக்கப்பட்டு, வயல் தரத்தில் தேறும் விதைப்பண்ணைகள் அறுவடைக்கு அனுமதிக்கப்படுகிறது.அறுவடை செய்யப்பட்ட விதைக்குவியல்களுக்கு, சுத்தி அறிக்கை வழங்கப்பட்டு, அரசு அனுமதி பெறப்பட்ட விதை சுத்தி நிலையங்களில் சுத்திகரிப்பு பணி மேற்கொள்ளப்படும். அரசு அங்கீகாரம் பெற்ற விதை பகுப்பாய்வு மையங்களுக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, முளைப்புத்திறன், பிற ரக கலவன்கள் புறத்துாய்மை மற்றும் ஈரப்பதம் போன்ற காரணிகள் ஆய்வு செய்யப்படுகிறது.ஆதார நிலை விதைகளுக்கு வெள்ளை நிற சான்று அட்டையும், சான்று நிலையாக இருந்தால், நீல நிற சான்று அட்டைகளும் பொருத்தப்பட்டு, தரமான சான்று பெற்ற விதைகளாக விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.தரமான சான்று பெற்ற விதைகள் தேவைப்படும் விவசாயிகள், உளுந்து விதைப்பண்ணை அமைத்து விதை உற்பத்தி செய்ய விரும்பும் விவசாயிகள், அருகிலுள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, திருப்பூர் மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குனர் தெரிவித்தார்