| ADDED : மார் 25, 2024 01:09 AM
திருப்பூர்:திருப்பூரில், முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., குணசேகரனுக்கு சொந்தமான காரில் எடுத்து செல்லப்பட்ட 25 எவர் சில்வர் பாத்திரங்களை, பறக்கும் படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட அணைப்பாளையம் பகுதியில், செல்வசங்கர் தலைமையிலான பறக்கும்படையினர், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., குணசேகரனுக்கு சொந்தமான காரில், டிரைவர் மூர்த்தி என்பவர் எடுத்துச்சென்ற, 25 எவர்சில்வர் பாத்திரங்கள் (ஹாட்பேக்) இருந்தன. உரிய ஆவணம் இல்லாததால், பறக்கும் படையினர் அவற்றை பறிமுதல் செய்தனர். குணசேகரன் மகள் வழி பேத்திக்கு, நேற்று காதணி விழா விருந்து, காலேஜ் ரோடு சீனிவாசா மஹாலில் நடந்துள்ளது. உறவினருக்கு பிரியாணி பார்சல் செய்து கொடுப்பதற்காக, 25 பாத்திரங்களை வீட்டில் இருந்து எடுத்து வந்ததாக, டிரைவர் கூறியுள்ளார். மாநகராட்சி அலுவலர்கள் கூறுகையில், 'பாத்திரங்கள் வாங்கியதற்கான 'பில்' வீட்டில் இருப்பதாக தெரிவித்தனர். பில்லை காட்டிவிட்டு, பாத்திரங்களை எடுத்துச்செல்லலாம் என்று கூறியுள்ளோம்,'' என்றனர்.