மரம் வெட்டுவதை தடுத்தபசுமை ஆர்வலர்கள்
திருப்பூர், : திருப்பூர், அவிநாசி ரோடு, குமார் நகர், 60 ரோடு அருகே, பிஷப் பள்ளியின் பின், மருதாசலபுரம் மெயின் ரோட்டில், மின்கம்பிக்கு இடையூறு ஏற்படுத்தாத பெரிய மரங்களை நேற்று சிலர் வெட்டிக்கொண்டிருந்தனர்.தகவல் அறிந்து, அங்கு சென்ற 'வனத்துக்குள் திருப்பூர்', 'டிரீம் -20 'பசுமை அமைப்பினர், மரம் வெட்டுவது குறித்து கேள்வி எழுப்பினர். கவுன்சிலர் அனுமதியுடன் தான் மரம் வெட்டப்படுவதாக, அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பின், கவுன்சிலரையும் சந்தித்து, மரம் வெட்டுவதை தடுத்து நிறுத்தினர்.'வனத்துக்குள் திருப்பூர்' அமைப்பினர் கூறுகையில், 'கவுன்சிலரை சந்தித்து, காரணம் கேட்டறிந்தோம். எவ்வித இடையூறும் செய்யாத மரங்களை வெட்ட வேண்டாம் என்று வலியுறுத்தி, மரத்தை பாதுகாக்கும் சட்ட போராட்டம் குறித்து விளக்கினோம். இனிமேல் மரத்தை வெட்ட மாட்டோம் என்று கவுன்சிலர் உறுதி அளித்தார். இதனால், மரம் வெட்டுவதும் கைவிடப்பட்டது,' என்றனர்.