உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பசுமை விருட்சங்கள்; பார் போற்றும் திருப்பூர்

பசுமை விருட்சங்கள்; பார் போற்றும் திருப்பூர்

திருப்பூர்: ''பசுமை திருப்பூர் என்று உலக நாடுகள் அழைப்பதற்குக் காரணமாக 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் அமைந்துள்ளது'' என்று தொழில்துறையினர் புகழாரம் சூட்டுகின்றனர்.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின், 10ம் ஆண்டு விழா, திருமுருகன்பூண்டி அடுத்த ஐ.கே.எப்., வளாகத்தில் வரும் 1ம் தேதி நடக்கிறது. இதில், 10ம் ஆண்டு மரக்கன்று நிறைவு விழாவும், 11ம் ஆண்டு திட்டத்துக்கான நாற்றுப்பண்ணை துவக்க விழாவும் நடைபெற உள்ளது.

பருவம் தவறாத மழை

சக்திவேல், நிறுவனத்தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்:'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், 10 ஆண்டுகளில், 22 லட்சம் மரங்கள் நட்டு, முன்னுதாரணத் திட்டமாக மாறியுள்ளது. மரம் நடவுக்கு பிறகு, திருப்பூர் மற்றும் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில், பருவநிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. மழைப்பொழிவு அதிகரித்துள்ளது; பருவம் தவறாது மழை பெய்து கொண்டிருக்கிறது. இதுவரை, 7,000 மெட்ரிக் டன் அளவு 'கார்பன்' உமிழ்வு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. 'வனத்துக்குள் திருப்பூர்' அமைப்பினால், உலக நாடுகள் மத்தியில், 'பசுமை திருப்பூர்' என்று அழைக்கும் அளவுக்கு திருப்பூருக்கு பெருமை கிடைத்துள்ளது.

உருவான வனங்கள்

கார்த்திகேய சிவசேனாபதி, தலைவர், வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம்:பருவநிலை மாற்றம் என்பது உலகின் மிகப்பெரிய பிரச்னையாக மாறியிருக்கிறது. மனித குலத்துக்கே மிகப்பெரிய சவாலாகவும் மாறியிருக்கிறது.அதை தடுத்து நிறுத்தும் அறிவை இயற்கை நமக்கு வழங்கியிருக்கிறது; மரம் வளர்ப்பதன் மூலம், சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்க்கலாம். தனிநபர்கள் துவங்கி அனைவருக்கும் இத்தகைய புரிதல் தேவை. 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 22 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன; 20 லட்சம் மரங்களாக வளர்ந்துள்ளன. இதன் மூலம், மாவட்டத்தின் பல இடங்களில் வனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

சிறந்த ஒருங்கிணைப்பு

'ஓசை' காளிதாஸ், சூழலியல் ஆர்வலர்:கடந்த 25 ஆண்டுகளாக, சூழலியல் சார்ந்து இயங்கி வருகிறேன். எனக்கு தெரிந்து, இந்தியாவில் மரம் நடும் திட்டங்கள் அதிகம் உள்ளன; லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நடப்படுகின்றன. ஆனால், 10 ஆண்டுகளில், 22 லட்சம் மரக்கன்றுகளை, மரமாக வளர்த்தெடுத்துள்ளது, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழு; சிறப்பான ஒருங்கிணைப்பே, வெற்றிக்கு காரணம்.ஒரு அமைப்பு, ஒரு நிறுவனம் என்று இல்லாமல், பசுமை அமைப்புகள், நிறுவனங்கள், விவசாயிகள் என, பல்வேறு தரப்பினரையும், நேர்த்தியாக ஒருங்கிணைத்து செல்வதே, 'வெற்றி' அமைப்பின் சிறப்பு. அனைத்து தரப்பினரின் பங்களிப்பு காரணமாக, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் என்பது, இந்தியாவில் மரம் வளர்க்க நினைப்பவர்களுக்கு மாபெரும் எடுத்துக்காட்டான திட்டமாகும்.

இந்தியாவுக்கே வழிகாட்டி

ஈஸ்வரன், மாநில செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்:'வெற்றி' அறக்கட்டளையின், 'வனத்துக்குள் திருப்பூர்' என்ற மரம் வளர்ப்பு திட்டம், மிகச்சிறந்த சேவையை செய்துள்ளது; மிகப்பெரிய சாதனை. கரியமில வாயுவை தடுத்து, ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் மரத்துக்கு விலை மதிப்பிட முடியாது; மிகவும் உயர்வானது.மரம் வளர்ப்பதை சாதாரணமாக கருத முடியாது; இத்திட்டம், இந்தியாவுக்கே வழிகாட்டும் திட்டமாகும். மரக்கன்று நடுவது மட்டுமல்ல, பராமரிப்பது, வளர்ப்பது என, தொடர்ச்சியாக கண்ணும் கருத்துமாக வளர்க்கப்படுகிறது. இத்திட்டம் இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை