தோட்டக்கலைத்துறை சார்பில் பனை விதைகள் வினியோகம் விவசாயிகளுக்கு அழைப்பு
உடுமலை: மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில், ஊராட்சி நிர்வாகங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளுக்கு நுாறு சதவீதம் மானியத்தில் பனை விதைகள் வழங்கப்படுகிறது.மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் திரு சுரேஸ்குமார் கூறியதாவது:தமிழகத்தின் மாநில மரமான, பனைமரம் நிலத்தடி நீரை அதிகரிக்கும்; மண்ணரிப்பைத் தடுக்கும்.மண்ணை உறுதிப்படுத்தி வளப்படுத்தியும், மண்ணிற்கு உகந்த மரமாக விளங்குவதோடு அடி முதல் நுனி வரை மக்களுக்கு பயனளித்து வருகிறது. தமிழகத்தில், 5 கோடி பனை மரங்கள் உள்ளன.ஏறத்தாழ, 3 லட்சம் குடும்பங்களுக்கு, பனை ஓலைகள், நார்கள் ஆகியவற்றைக்கொண்டு கூடை பின்னுதல், பாய் முடைதல், கயிறு திரித்தல் மற்றும் 11 ஆயிரம் பனைத்தொழிலாளர்கள், நுங்கு அறுவடை, பதநீர் இறக்குதல், பனை வெல்லம் தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்காகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், தமிழக அரசால் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், நுாறு சதவீதம் மானியத்தில் பனை விதைகள் வழங்கப்படுகிறது.பனங்கொட்டைகளை சேகரிக்க, தாய் பனைகள், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இன்றி, அதிக விளைச்சல் கொண்டதாகவும், விரைவில் ஈனக்கூடியதாகவும், முறையாக காய்க்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.தாய்ப்பனையிலிருந்து சேகரிக்கப்பட்ட பழுத்த பழங்களை, 4 வாரங்களுக்கு நிழலில் குவித்து வைத்திருந்தால், விரைவில் முளைப்புத்திறன் நிகழும்.பனங்கொட்டைகளின் சதைப்பகுதியை நீக்கி, விதைப்பதற்கு முன்பாக, மூன்று மணி நேரம் நீரில் ஊற வைத்தால், நுாறு சதவீதம் முளைக்கும்.பனங்கொட்டைகளை நேரடியாக விதைத்தும், நாற்று விட்ட பனங்கிழங்குகளை எடுத்து நடவு செய்து வளர்க்கலாம்.நட்டவுடன் நீர் பாய்ச்சுவதோடு, முதல் ஒரு ஆண்டு, 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 2 முதல் 3 வருடம் வரை, மாதம் ஒரு முறையும், அதன் பின் பருவ மழை சீராக பெய்தால் நீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இருக்காது.13 முதல் 15 வருடம் கழித்து சுமார், 12 முதல், 13 மீட்டர் உயரம் வளர்ந்த பின், பாளை விட்டு பதநீர் கொடுக்கும். சராசரியாக ஒரு மரம் ஆண்டுக்கு, 125 முதல் 150 லிட்டா பதநீர் கொடுக்கும்.ஒரு லிட்டர் பதநீரை காய்ச்சினால், 180 முதல், 250 கிராம் பனைவெல்லம் கிடைக்கும். மடத்துக்குளம் வட்டாரத்திற்கு பனைமேம்பாட்டு திட்டத்தின் கீழ், தோட்டகலைத்துறை வாயிலாக, 1,925 பனை விதைகள் தயார் நிலையில் உள்ளது.ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, 50 பனை விதைகளும், பசுமை அமைப்புகள், ஊராட்சி நிர்வாகங்களுக்கு, 100 பனை விதைகள் வழங்கப்படும்.மேலும் விபரங்களுக்கு, துங்காவி, தாந்தோணி, மெட்ராத்தி, மைவாடி ஜோத்தம்பட்டி, பாப்பான்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் தாமோதரன், 96598 38787 என்ற எண்ணிலும், சங்கரமாநல்லூர், கொமரலிங்கம், கொழுமம், சர்க்கார் கண்ணாடிபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், பூவிகாதேவி, 80720 09226; அ.க.,புதூர், கணியூர், வேடபட்டி, சோழமாதேவி, காரத்தொழுவு, கடத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள், பபிதா 85250 25540 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்தார்.