சிதிலமடைந்த மின்விளக்கு கம்பங்கள் மாற்ற உடனடி நடவடிக்கை அவசியம்
உடுமலை; கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஓலப்பாளையம் பகுதியில், மின்விளக்கு கம்பங்கள் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன.கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஓலப்பாளையம் பகுதியில், ஐம்பதுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ள கம்பங்கள் முழுவதும், நீண்ட நாட்களாக சேதமடைந்த நிலையில் உள்ளன.கம்பங்களை மாற்றுவதற்கு அப்பகுதியினர் தொடர்ந்து பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கம்பங்கள் முழுவதும் சிதிலமடைந்து, கீழே சாயும் நிலையில் உள்ளன.இதனால், அப்பகுதியினர் வெளியில் சென்று வருவதற்கும் அச்சப்படுகின்றனர். மேலும் வீடுகளின் முன்பாகவே கம்பங்கள் இருப்பதால், வீடுகளின் மீது சாய்ந்துவிடும் என அன்றாடம் அச்சுறுத்தலுடன் இருக்க வேண்டியுள்ளது.தற்போது கம்பங்களை மாற்றுவதற்கு, அதன் அருகில் குழிகள் தோண்டப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு குழிகள் அமைக்கப்பட்டும் பல நாட்களாகி விட்டது. நடவடிக்கைகள் தொடர்ந்து தாமதமாவதால், அப்பகுதி மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர்.காலை, மாலை நேரங்களில் முதியவர்கள் நடைபயிற்சி செய்வதற்கும் தயங்குகின்றனர். மின்விளக்கு கம்பங்களுக்கு அருகே, தோண்டப்பட்ட குழிகளில் அடிக்கடி பொதுமக்கள் தடுமாறி விழுகின்றனர்.கம்பங்களை மாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.