காய்கறி விற்பனையில் கமிஷன் முறையால் பாதிப்பு; மொத்த சந்தைகளை உருவாக்க வலியுறுத்தல்
உடுமலை : சந்தைகளில் கமிஷன் முறைகேடு காரணமாக, காய்கறி விவசாயிகள் பாதித்து வருவதை தடுக்கவும், அரசு நிறுவனங்கள் சார்பில் மொத்த விற்பனை சந்தை உருவாக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.காய்கறி உற்பத்தி செய்யும் விவசாயிகள், விளை பொருட்களை உடுமலை நகராட்சி சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.ஏல முறையில், காய்கறி விற்பனை நடந்தாலும், வாகன கட்டணம், சந்தைக்குள் நுழைய சுங்க கட்டணம், இறக்கு கூலி, ஏற்றுக்கூலி மற்றும் விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் மதிப்பில், 10 சதவீதம் கமிஷன், எதிர் கமிஷன் என பெரும் தொகை முறைகேடாக விவசாயிகளிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. அண்டை மாநிலங்களில் இம்முறை இல்லாத நிலையில், தமிழகத்தில் மட்டும் அமல்படுத்தப்படுகிறது. எனவே, கட்டணம், கமிஷன் கொள்ளையால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க, ஒவ்வொரு நகரங்களிலும், ஒழுங்கு முறை விற்பனைக்கூடம், வேளாண் வணிகம் துறை சார்பில், மொத்த விற்பனை மையங்கள் உருவாக்க வேண்டும்.பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நல சங்கத்தலைவர் செல்வராஜ் கூறியதாவது: விவசாயிகள் காய்கறி உற்பத்திக்கு, விதை, நாற்று, உரம், பூச்சி மருந்துகள், களை எடுக்க, பறிப்பு கூலி, போக்குவரத்து கட்டணம், சாகுபடி செலவினம் அதிகரித்துள்ள நிலையில், கமிஷன் மண்டிகளில், வியாபாரிகளும், கமிஷன் கடை உரிமையாளர்களும் 'சிண்டிகேட்' அமைத்து, விலை குறைப்பதோடு, கமிஷன் என்ற முறையில் பெருமளவு தொகை வசூலிக்கப்படுகிறது.சாகுபடி செய்த விவசாயிகளை விட, இடைத்தரகர்கள், வியாபாரிகள் அதிகளவு லாபம் பார்த்து வருகின்றனர். சிறிய அளவில் காய்கறி விற்பனை செய்ய, உழவர் சந்தைகள் இருந்தாலும், நுாறு விவசாயிகளுக்கு மட்டுமே பயன் அளிக்கும்.அதிலும், உற்பத்தியாகும் காய்கறிகளை முழுமையாக விற்பனை செய்ய முடியாது. பெரும்பாலான விவசாயிகள் மொத்த மார்க்கெட்களையே நம்பி இருக்க வேண்டியுள்ளது.எனவே, விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க அரசு சார்பில், மற்ற மாநிலங்களில் உள்ளதை போல், மொத்த விற்பனை சந்தை, காய்கறிகளை இருப்பு வைக்க குளிர்பதன கிடங்கு உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.