கடல் இல்லாத நகரில் வளர்ப்பு கடல் நீச்சலில் சாதிக்க துடிப்பு
திருப்பூர் மாவட்ட நீச்சல் சங்கச் செயலாளர் சுதீஷ் கூறியதாவது: மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் திருப்பூர் வீரர்கள் பங்கு பெற்று, பதக்கம் பெறுகின்றனர். கடந்த, 3 ஆண்டாக தொடர்ந்து தேசிய அளவிலான போட்டிகளில் நிறைய பதக்கம் பெற்றுள்ளனர்.மாவட்ட நிர்வாகம், விளையாட்டு அதிகாரிகள் சிறப்பான முறையில் ஊக்குவிப்பு வழங்கி வருகின்றனர். கடல் நீச்சல் விளையாட்டிலும், திருப்பூர் மாவட்ட மாணவ, மாணவியரை பங்கு பெறச் செய்து வருகிறோம். திருப்பூரில் கடல் இல்லை என்பதால், நீச்சல் குளத்தில் தொடர் பயிற்சி பெறுவோரை, கேரளா அழைத்து சென்று, அங்குள்ள, 200, 300 மீ., நீளமுள்ள பெரிய குளங்களில் பயிற்சி பெறச் செய்து, கடல் நீச்சல் போட்டிக்கு தயார்படுத்துகிறோம். சிறப்பு குழந்தைகள் 'சிறப்பு'
கால்கள் செயலிழந்த சபரி என்ற மாணவன், கடல் நீச்சல் போட்டியில், 500 மீ., கடந்து, மாநில அளவில் வெற்றி பெற்றுள்ளார். தவிர, நீச்சல் போட்டியில், மாநில அளவில், 3 தங்கம் வென்றுள்ளார். அவரை தேசிய போட்டிக்கு தயார்படுத்தி வருகிறோம். துவாரகா கல்வி நிலையத்தில் படிக்கும் தினேஷ் என்ற சிறப்பு மாணவன், மாநில அளவில் பதக்கம் பெற்றுள்ளார். சாய் கிருபா கல்வி நிலையத்தில் படிக்கும் அபி என்ற மாணவன், தற்போது புதுவையில் நடந்த போட்டியில் பங்கெடுத்தார்.மாவட்டத்தில் முதன் முறையாக, 'பின்ஸ் நீச்சல்' என்ற பிரிவில் வீரர்களை தயார்படுத்தி வருகிறோம். அடுத்த ஓராண்டில், இந்த விளையாட்டை பிரபலப்படுத்தி விடுவோம். திறமையான அரசுப்பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக நீச்சல் பயிற்சி வழங்க தயாராக உள்ளோம்.