| ADDED : ஜூலை 29, 2024 11:20 PM
திருப்பூர்:அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் குமரவேல், பாலசுப்பிரமணி மற்றும் மா.கம்யூ., - தி.மு.க.,வினர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் அளித்த மனு:புதுப்பாளையம் ஊராட்சி, வஞ்சிபாளையம் அருகே, பொன் ராமபுரத்தில், சமுதாய நலக்கூடம் உள்ளது. கழிப்பிடம் உட்பட எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை. ஆண்டுக்கு மூவாயிரம் ரூபாய் அளவிலேயே சமுதாய நலக்கூடத்தால் வருவாய் கிடைக்கிறது.இந்நிலையில், வசந்தகுமார் என்பவரை பொறுப்பாளராக நியமித்து, 9 ஆயிரம் ரூபாய் மாத சம்பளம் வழங்கப்படுகிறது. முறைகேடாக எடுக்கப்பட்ட நிதியை, ஊராட்சி கணக்கில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.இது குறித்து புதுப்பாளையம் ஊராட்சி தலைவர் கஸ்துாரி பிரியா கூறுகையில், ''ஊராட்சி கூட்டத்தில் வார்டு உறுப்பினர்களின் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றியே வசந்தகுமார் என்பவரை பணியமர்த்தியுள்ளோம். அவர் சம்பள தொகையை வெளிப்படைத்தன்மையோடு வங்கி கணக்கிலேயே வழங்கி வருகிறோம்.சிலர் காழ்ப்புணர்வால், தவறான புகார் கூறுகின்றனர். கலெக்டர் கேட்டால் உரிய ஆவணத்தை வழங்குவோம்,'' என்றார்.