கடந்த, 2023ம் ஆண்டு பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவில் திருப்பூர் மாநிலத்தில் முதலிடம் பெற்றது. தேர்வெழுதிய, 24 ஆயிரத்து, 232 மாணவ, மாணவியரில், 23 ஆயிரத்து, 356 தேர்ச்சி பெற்று, 96.38 சதவீதம் பெற்று அசத்தினர்.இந்த 'பேட்ஜ்' அப்படியே, 2024ம் ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை எதிர்கொண்டது. 10 ஆயிரத்து, 810 மாணவர், 13 ஆயிரத்து, 039 மாணவியர் என மொத்தம், 23 ஆயிரத்து, 849 பேர் தேர்வெழுதினர்; 23 ஆயிரத்து, 242 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம், 97.45.தற்போது, பிளஸ் 2 வில் மாநில அளவில் முதலிடம் பெற்றுக் காட்டிய திருப்பூர் மாணவர்கள், கடந்த, 2022 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 88.46 சதவீத தேர்ச்சி மட்டுமே பெற்று, மாநிலத்தில், 29 வது இடம் பெற்று, கல்வி அதிகாரிகளை கலங்க வைத்தனர்.ஆனால், அடுத்த இரு ஆண்டுகளும் (2023) பிளஸ் 1ல் மாநிலத்தில் முதலிடம் (96.38), (2024) பிளஸ் 2விலும் மாநிலத்தில் முதலிடம் (97.45) பெற்று, அடுத்தடுத்து பாராட்டுக்களை பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்ச்சியை பொறுத்த வரை திருப்பூர் மாவட்டம், 11வது இடத்தில் இருந்து, பின்தங்கி, 21வது இடத்துக்கு சென்றுள்ளது. அதே நேரம், பிளஸ் 2 வில், 2023ல் இரண்டாவது இடம் பெற்ற திருப்பூர், தற்போது முதலிடம் பெற்றுள்ளது. பிளஸ் 1ல் கடந்தாண்டு முதலிடம் பெற்று, நடப்பாண்டு மூன்றாமிடம் (92.23) பெற்றுள்ளது.மேல்நிலைக்கல்வியை பொறுத்த வரை பெரிய சறுக்கல் இல்லை. அதே நேரம், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தான் கவலையளிக்கிறது. மாவட்ட கல்வித்துறை வரும் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதும், துவக்கம் முதலே தேர்ச்சி பெற தகுதியான வகையில் மாணவர்களை தயார்படுத்துவது முக்கியம்.