உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துாய்மைப்பணி உரிமம் புதுப்பிப்பு! பூண்டியில் ஆட்சேபனையை சரிக்கட்ட திட்டம்

துாய்மைப்பணி உரிமம் புதுப்பிப்பு! பூண்டியில் ஆட்சேபனையை சரிக்கட்ட திட்டம்

திருப்பூர்;திருமுருகன்பூண்டி நகராட்சியில் தனியார் வாயிலாக மேற்கொள்ளப்படும் துாய்மைப்பணிக்கு, உரிமம் புதுப்பிப்பு செய்து கொடுக்க, கவுன்சிலர்கள் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர். அரசின் கொள்கை முடிவு என்பதால், பேச்சு நடத்தி சுமூக தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் துாய்மைப்பணி தனியார் மயமாக்கப்பட்டது; 3 ஆண்டு குத்தகை அடிப்படையில் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட இப்பணி, ஓராண்டு முடிந்த நிலையில், அந்தந்த நகராட்சிகள் சார்பில் உரிமம் புதுப்பிப்பு செய்து கொடுக்க வேண்டும் என்பது விதி.அதன்படி, பூண்டி நகராட்சியில் துாய்மைப்பணி தனியார் மயமாகி, வரும், 30ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில், அனைத்து கவுன்சிலர்களின் ஒப்புதலுடன், அடுத்த மாதம், 5ம் தேதிக்குள் உரிமம் புதுப்பிப்பு செய்து கொடுக்கப்பட வேண்டும்.தனியாரின் துாய்மைப்பணியில் திருப்தியில்லாததால், உரிம புதுப்பிப்பு செய்து கொடுப்பதில், கவுன்சிலர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.குழப்பநிலை கூடாது!துாய்மைப்பணி டெண்டர் எடுத்த தனியார் நிறுவனத்தினரின் செயல்பாடில் திருப்தியில்லை. இருப்பினும், கடந்தாண்டை காட்டிலும், வரும் ஆண்டுகளில், துாய்மைப்பணியில் கூடுதல் கவனம் செலுத்துவோம் என, அந்நிறுவனத்தினர் உறுதியளித்துள்ளனர். வார்டுகளில் உள்ள சாக்கடைகளில் தேங்கும் குப்பை, கழிவு அகற்ற, தனியார் நிறுவனத்தினரால் துாய்மைப்பணியாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. தினமும், வெவ்வேறு துாய்மைப் பணியாளர்கள், வார்டுகளில் குப்பை சேகரிக்க வருவதால், மக்கள் குழப்பமடைகின்றனர். இதுபோன்ற குறைகள் சரி செய்யப்பட வேண்டும்.- லதா, கவுன்சிலர் (அ.தி.மு.க.,)---விதிகளை பின்பற்றணும்'தனியார்மயமே கூடாது' என்பது தான், எங்களின் நிலைப்பாடு. இருப்பினும், அரசின் கொள்கை முடிவு என்பதால், ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. பூண்டி நகராட்சியில், 88 துாய்மைப் பணியாளர்களை குப்பை சேகரிக்கும் பணிக்கு பயன்படுத்த வேண்டிய நிலையில், 50 பேர் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர். அவர்களது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பி.எப்., இ.எஸ்.ஐ., தொகை மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு தொகையை சரியாக செலுத்துவதில்லை என்ற புகாரும் உள்ளது. துாய்மைப் பணியாளர்களுக்கு, வரும் ஜூன் முதல், அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும். சாக்கடையில் தேங்கும் குப்பை, கழிவுகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.- சுப்ரமணியம், கவுன்சிலர் (மா.கம்யூ.,)---மேற்பார்வையில் கவனம்...துாய்மைப்பணியை நகராட்சி நிர்வாகமே மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என, மண்டல இயக்குனரிடம் வலியுறுத்தினோம். மாநிலம் முழுக்க நகராட்சிகளில், துாய்மைப்பணி தனியார்மயமாக்கப்பட்டு விட்டதால், அதற்கு வாய்ப்பில்லை எனக்கூறிவிட்டார். பூண்டி நகராட்சியில், 6 சுகாதார மேற்பார்வையாளர்கள், ஒரு ஆய்வாளர்கள், சுகாதார அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தனியார் வாயிலாக குப்பை சேகரிக்கும் பணி மேற்கொள்ளபட்டாலும், முழுக்க முழுக்க நகராட்சி அதிகாரிகளின் மேற்பார்வையில் பணி நடக்க வேண்டும். தொழிலாளர்களுக்கான பி.எப்., இ.எஸ்.ஐ., தொகை பிடித்தம் செய்து, அரசுக்கு சரியான முறையில் செலுத்த வேண்டும்.- ராஜேஸ்வரி, துணைத்தலைவர் (இ.கம்யூ.,)----சுமூகமான முடிவுநகராட்சியில் உள்ள வார்டுகளில், சாக்கடை சுத்தம் செய்வதற்கு தான் துாய்மைப் பணியாளர்கள் இல்லாத நிலை இருந்தது; நகராட்சி துாய்மைப் பணியாளர்கள் வாயிலாக அப்பணியை மேற்கொள்ள மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தினர் வாயிலாக மேற்கொள்ளும் துாய்மை பணியில் உள்ள குறைகளை, கவுன்சிலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்தாண்டை விட சிறப்பாக செய்து கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர்; அதன் பேரில், அந்நிறுவனத்தினருக்கு உரிம புதுப்பிப்பு செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.- குமார், நகராட்சி தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி